பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்120முத்துவீரியம்

(வ-று.) முந்நூறு. (283)

நான்கும் ஐந்தும்

443. நான்கு மைந்து முதனிலை திரியா.

(இ-ள்.) நான்கென்னும் எண்ணும் ஐந்தென்னும் எண்ணுந் தம் மொற்றுக்கள்
நிலைதிரியாவா மென்க.

(வ-று.) நானூறு, ஐந்நூறு எனவரும். (284)

தொண்ணூறும் தொள்ளாயிரமும்

444. ஒன்பா னொடுபத்து நூறு மொன்றின்
     முன்னதி னேனைய முரணி யொவ்வொடு
     தகர நிறீஇப்பஃ தகற்றி னவ்வை
     நிரலே ணளவாய்த் திரிப்பது நெறியே.1

(இ-ள்.) ஒன்பதென்னும் எண்ணொடு பத்தென்னும் எண்ணும் நூறென்னும் எண்ணும்
வந்து புணரின் பத்தென்னும் எண்ணை நூறாகவும், நூறென்னும் எண்ணை ஆயிரமாகவுந்
திரித்து, ஒகரத்தொடு தகரமெய்யை நிறுத்திப் பத்தை நீக்கி னகரமெய்யை முறையே
ணகரமெய்யாகவும், ளகரமெய்யாகவுந் திரிப்பது நெறியாமென்க.

(வ-று) தொண்ணூறு, தொள்ளாயிரம்.

(வி-ரை.) ஒன்பது + பத்து = தொண்ணூறு. இப்புணர்ச்சியில் நிலைமொழியும்
வருமொழியும் புணருங்கால் ஒகரம் நீங்கலாக ஏனையவெல்லாம் மாறிவிடுகின்றது.
தொல்காப்பியரும், இலக்கண விளக்க நூலாரும், நேமிநாதரும் இச்சொற்களுக்கு ஒவ்வொரு
விதமாகப் புணர்ச்சி விதி கூறுவர். எனினும் இவையெல்லாம் பொருந்துவதன்று என்றும்,
தொண்டு + நூறு = தொண்ணூறு; தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என ஆயிற்று
எனக் கொள்வதே சிறப்புடைத்து என்றும் கூறுவர் திரு. ஞா. தேவநேயப் பாவாணர்
அவர்கள். 9-தொண்டு; 90-தொண்பது; 900-தொண்ணூறு; 9000-தொள்ளாயிரம் என
வழங்குவதே முறையென்றும் தொண்டு என்னும் வழக்கு அற்றுப்போக, தொன்பது
9-ஐயும், தொண்ணூறு 90-ஐயும், தொள்ளாயிரம் 900-ஐயும் வழங்கத் தொடங்கிவிட்டன
என்றும் அவர் கூறுவர். ஒன்பது என்பதைத் தொண்டு என வழங்கினர் என்பதற்குத்
‘தொண்டு தலையிட்ட’ (தொல் - 1358) என்பதையும், ‘தொண்டு படுதிவவு’ (மலைபடு-21)
என்பதையும் மேற்கோளாகக் காட்டுவர். (தொல்-எழுத்து-இளம்-445-விளக்கவுரை.) (285)

1. நன் - எழுத் - உயிரீற் - 44.