பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்128முத்துவீரியம்

(இ-ள்.) முன்னிலையும் தன்மையும் படர்க்கையுமென இடமூன்றாம்.

(வ-று.) நீ நடந்தாய், முன்னிலை; நான் நடந்தேன், தன்மை; அவன் நடந்தான்,
படர்க்கை. (14)

வழக்கின் வகை

472. இயல்புந் தகுதியு மெனவழக் கிருமை.

(இ-ள்.) வழக்கு - இயல்புவழக் கெனவும், தகுதிவழக்கெனவும் இரண்டுபிரிவினை
யுடையவாம்.

(வி-ரை.) எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லாற்
கூறுதல் இயல்பு வழக்காம். இப்பொருளை யறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லாற்
கூறுதல் தகுதி யன்று வேறொரு சொல்லாற் கூறல் தகுதியெனக் கூறுதல் தகுதி வழக்காம்.
(15)

இயல்பு வழக்கு

473. அவற்றுள்,
     இயல்பு மரூஉவிலக் கணமுடை யனவிலக்
     கணப்போலி யென்மனார் கற்றுணர்ந் தோரே.

(இ-ள்.) மேற்கூறிய விரண்டனுள், இயல்புவழக்கு மரீஇயதும், இலக்கணவழியால்
வருவதும், இலக்கணமுடையது போல வருவதும் என மூவகையாம்.

(வ-று.) அருமந்தபிள்ளை, சோணாடு, மராடி.

(வி-ரை.) இலக்கண நெறியால் வருவதனை இலக்கணமுடைய தென்றும்,
இலக்கணமுடையவன்றிப் படைப்புக்காலத்து இலக்கண முடையதோடு ஒருங்கு
படைக்கப்பட்டதுபோல வருவதனை இலக்கணப் போலியென்றும், தொன்று தொட்டதன்றி
இடையே இலக்கணம் சிதைந்து மரீஇயதனை மரூஉவென்றும் கூறுவர். (நன் - 267 - சங்கர
நமச்சிவாயர் உரை) (16)

தகுதி வழக்கு

474. தகுதி குழுஉக்குறி மங்கல மிடக்கர்
     அடக்க லென்மனா ரறிந்திசி னோரே.

(இ-ள்.) தகுதிவழக்கு, குழூஉக்குறி, மங்கலம், இடக்கரடக்கல் ஆம்.