பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்211முத்துவீரியம்

செய்யுட்கண் திணைமுதலாயின திரிந்துவருவன:-

எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார்
தொழுதிமைக் கண்ணமைந்த தோட்டார் - முழுதகலா
நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும்
பேணற் கமைந்தார் பெரிது.

(வி-ரை.) ஆற்றுட் செத்த எருமை ஈர்த்தால் ஊர்க்குயவர்க்குக் கடன் என்ற
தொடர்பற்றி எழுந்த கதை ஒன்றுண்டு. அது வருமாறு:

‘‘வாணிகச் சாத்தொடு சென்றானொருவன், அச்சத்தினின்றும் பிரிந்து ஒரு
பட்டினத்துட் சென்று பல எருமைகளைப் பொருள் கொடுத்தேற்றுத் தந்நாடு சேறற்கு
ஒருப்பட்டுப் பலப்பல காவதங் கடந்து ஒரு கான் யாற்றடைகரையை யண்மி
அவ்வெருமைகளை நீரருந்தச் செய்து அயர்வுயிர்த்துப் பின்னர் அவ்வாற்றைக் கடக்கும்
அமையத்துக் காலமல்லாத காலத்துச் சேய்மைக்கண் பெய்த மழையான் பொருக்கென
வெள்ளந்தோன்றி அவ்வெருமைகளை அடித்துக்கொண்டு ஓர் ஊர்ப்புறத்தொதுக்கிவிட்டது.
அதனை யுணர்ந்த அவ்வூரவர் அவைகளை ஈர்த்துக் கொணர்ந்து கரை சேர்த்தற்குப்
பலரை வேண்டியும் நாற்றம் மிகுதியாக விருந்தமையின், ஒருவரும் உடன்பட்டிலர். இதனை
யுணர்ந்த பெரியாரொருவர் ‘இங்ஙனமாய செயல் நேரிடின், இச்செயலை இன்னவாறு
செய்து முடித்தல் வேண்டுமென நம்மூர் அடங்கலிலிருக்கும்; அதனைக் கணக்கனை
யழைத்துக் கேட்பின் உண்மை வெளியாம்’ என உரைத்தனர். அவ்வாறே கணக்கனை
யழைத்துக் கேட்க அவன் அடங்கலை எடுத்துவந்து ‘கண்ணுறீஇக் கழறுகின்றேன்’ எனக்
கூறித் தம்மில்லிற் சென்று தனக்கு ஆண்டுதோறும் நன்கொடையாகக் கொடுக்கும்
பொருளை அவ்வாண்டிற் கொடாத அவ்வூர்க் குயவரை யொறுத்தற்குத் தக்க
அமையமிதுவே யெனக் கருதிக்,

‘காட்டெரு முட்டை பொறுக்கி
மட்கலஞ் சுட்ட புகையான்
மேற்கே மேகந் தோன்றி
மின்னி யிடித்து மழைபொழிந்து
யாற்றில் நீத்தம் பெருகி
அடித்துக் கொல்லும் எருமைகளை
ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல்
இவ்வூர்க் குயவர்க் கென்றுங் கடனே’

என்று ஒரு பழைய ஓலையில் வரைந்து அவ்வடங்கலோடு சேர்த்துக் கட்டி அவ்வூரவர்
முன் கொணர்ந்து கட்டை யவிழ்த்துப் பல ஏடுகளைத் தள்ளி படித்துக்காட்டினன்.
அதனைக் கேட்ட பெரியார் பலரும் குயவன் சுள்ளையினெழுந்த புகையானாய
மேகந்தந்த நீரான் எருமை சாதலின், இவ்வூர்க் குயவரே இவைகளைக் கரையேற்றல்
முறையென முடிவு செய்தனர்’’ என்பதாம். (தொல் - சொல் - இளம்-விளக்க - 442).