பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்212முத்துவீரியம்

‘எழுதுவரிக் கோலத்தார்’ என்னும் பாடல் பெண்ணிற்கும் நூலிற்கும்
பொருந்துவதாகும். வரிக்கோலம் - செவ்வரி, கருவரியழகு; வரிவடிவம். தொகுதி - கூட்டம்.
தோடு - இதழ். (116)

செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்

759. 1 செய்யா என்னும் முன்னிலை வினைச்சொல்
       செய்யென் கிளவி யாகிட னுடைத்தே.

(இ-ள்.) செய்யாயென்னும் வாய்பாட்டதாகிய முன்னிலை வினைச் சொல்,
ஆயென்னுமீறுகெடச் செய்யென்னுஞ் சொல்லாய் நிற்றலு முடைத்தாம்.

(வ-று.) நடவாய், வாராய், உண்ணாய், தின்னாய் என்பன ஈறுகெட்டு-நட, வா, உண்,
தின், எனச் செய்யென் கிளவியாயினவாறு காண்க. (117)

முன்னிலை வினைக்கண் வரும் ஈகாரமும் ஏகாரமும்

760. 2 முன்னிலை முன்ன ரீயு மேயும்
       அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே.

(இ-ள்.) முன்னிலைவினைச் சொல்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம்முன்னிலைச்
சொற்கேற்ற மெய்யை ஏறிவரும்.

(வ-று.) ‘சென்றீபெரும நிற்றகைக்குநர் யாரே’ (அகம் - 46); ‘அட்டி லோலை
தொட்டனை நின்மே’ (நற் - 300) எனவரும். (118)

முதல் இடைகடைக் குறை

761. ஒருமொழி மூவழிக் குறைதலும் வரையார்.

(இ-ள்.) ஒருசொல் முதலினும் இடையினும் கடையினும் குறைதலை நீக்கார்.

(வ-று.) மரை - ஓதி - நீல். (119)

மேலதற்கோர் சிறப்புவிதி

762. குறைந்தன வாயினு நிறைந்தன வாகும்.

(இ-ள்.) அம்மூன்றுமொழியுங் குறைந்தனவாயினும் நிறைந்தனவேயாம்.

1. தொல் - எச்ச - 54.

2. ,, ,, 55.