சொல்லதிகாரம் | 214 | முத்துவீரியம் |
(வி-ரை.) ஞாயிறு பட
வந்தான் என்பது பட்டு வந்தான் எனத் திரிந்தது.
ஓடிவந்தான்
என்பதில் வந்தான் என்னும் வினையை
ஓடி என்பது விசேடித்து நின்றது. எனவே
வினையெச்சங்களுள் சில ஈறு திரிந்தும், முடிக்கும்
சொல்லை விசேடித்தும் வரும்
இலக்கணமுடையது என்பது
இதனாலறியலாம். இதன் விரிவைச் சேனாவரையர்
உரையான்
அறிக. (123)
குறிப்பால்
பொருளுணர்த்துஞ் சொற்கள்
766. முன்னத்தி னுணருங்
கிளவியு முளவே.
(இ-ள்.) குறிப்பாற்
பொருள் அறியப்படும் சொற்களும் உளவாம்.
(வ-று.) குழைகொண்டு
கோழியெறியும் வாழ்க்கையர்,
(வி-ரை.) குழை கொண்டு
கோழி எறியும் வாழ்க்கையர் எனவே அன்னபெருஞ்
செல்வத்தர் எனக் குறிப்பானறியலாம். (124)
ஒருபொருள் இருசொல்
767. 1 ஒருபொரு ளிருசொல்
பிரிவில வரையார்.
(இ-ள்.) ஒருபொருள்
மேல்வரும் இரண்டுசொல் பிரிவின்றித் தொடர்ந்தவற்றை
நீக்காரென்க.
(வ-று.)
நிவந்தோங்குபெருமலை.
(வி-ரை.) நிலைத்தல்
ஓங்கல் என்பன இரண்டும் ஒருபொருளன. மிகவுயர்ந்த
மலை
என்பது கருத்து. (125)
ஒருமை சுட்டிய பெயர்ச்
சொற்கள்
768. 2 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனுமா
ருண்டே.
(இ-ள்.)
ஒருமைக்குரியசொல் பன்மைக்காகும் இடனுமுண்டு.
(வ-று.) ‘ஏவலிளையர்
தாய்வயிறு கறிப்ப’ (அகம்-66) எனவரும்.
(வி-ரை.) ஒருமையைக்
குறித்து வருஞ் சொற்கள் பன்மைப் பொருள்பட நிற்பதும்
உண்டு என்பது இதன் கருத்தாகும்.
தாய் என்னும் ஒருமை
சுட்டிய பெயர் இளையர் என்ற பன்மைக் கேற்பத் தாயர்
எனப் பன்மையுணர்த்தியவாறு காண்க. (126)
ஒழிபியல் முற்றும்.
1. தொல் - சொல் - எச்ச -
64.
2. ,, ,, ,, - 65.
|