பக்கம் எண் :
 
பொருளதிகாரம்216முத்துவீரியம்

ஐந்திணை

772. அன்புடைக் காமமைந் திணைவயிற் படுமே.

என்பது, குறிஞ்சியும் முல்லையும் பாலையும் மருதமும் நெய்தலும் ஆகிய
ஐந்திணையும் அன்புடைக்காமம். (4)

பெருந்திணை

773. பொருந்தாக் காமம் பெருந்திணைப் பொருட்டே.
     என்பது, பெருந்திணை பொருந்தாக்காமம்.

(வி-ரை.) பெருந்திணை நடுவண் ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மிக்கும் குறைந்தும்
வருதலானும், எண்வகை மணத்தினும் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்பன
அத்திணைப்பாற் படுதலானும் இந்நான்கு மணமும் மேன்மக்கள்மாட்டு நிகழ்தலானும், இவை
உலகினுள் பெருவழக்கு எனப் பயின்று வருதலானும், அது பெருந்திணை எனக் கூறப்பட்டது
என்பர் இளம்பூரணர். (5)

உரிப்பொருள்

774. முதல்கரு வுரிப்பொருள் மூன்றா கும்மே.

என்பது, பொருள் - முதற்பொருளும், கருப்பொருளும், உரிப்பொருளும் என மூன்று
வகைப்படும். (6)

முதற்பொருள்

775. அவற்றுள்,
     முதல்நிலம் பொழுதிரு வகைப்படு மெனலே.

என்பது, முற்கூறியவற்றுள் முதற்பொருள்-நிலமும் பொழுதும் என இரண்டு
பொருள்களையுடையன. (7)

ஐந்திணையின் பெயர்கள்

776. முல்லை குறிஞ்சி பாலை மருதம்
     நெய்த லைந்திணைக் கெய்திய பெயரே.

என்பது, முல்லையெனவும் குறிஞ்சியெனவும், பாலையெனவும் மருதமெனவும்
நெய்தலெனவும் ஐந்திணைக்குப் பொருந்திய பெயராம். (8)