பக்கம் எண் :
 
பொருளதிகாரம்217முத்துவீரியம்

ஐந்நிலத்திற்குரிய இடம்

777. வரையே வனமே சுரமே மருதந்
     திரையே யவையவை சேர்தரு மிடனே.

என்பது, மலையும் மலையைச்சார்ந்த இடமும் குறிஞ்சியாம்; காடும் காட்டைச்சார்ந்த
இடமும் முல்லையாம்; பாலையும் பாலையைச் சார்ந்த இடமும் சுரமாம்; வயலும்
வயலைச்சார்ந்த இடமும் மருதமாம்; கடலும் கடலைச்சார்ந்த இடமும் நெய்தலாம்.

என்னை?

மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. (தொல்-அகம்-5)

என்றாராகலின். (9)

பொழுது

778. காலம் பருவம் பொழுதிரு வகைப்படும்.

என்பது, பொழுது-காலமும் பருவமும் என இரண்டு வகைப்படும், அவற்றைப்
பெரும்பொழுது சிறுபொழுது என்ப. (10)

பெரும்பொழுது

779. அவற்றுள்,
     பருவங் காரே கூதிர் முன்பனி
     பின்பனி யிளவேனின் முதுவேனி லாறே.

என்பது, முற்கூறியவற்றுள், பருவம் - கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில்
முதுவேனில் என்றவாறு. (11)

அதற்குரிய திங்கள்

780. அவைதாம்,
     ஆவணி முதலா ஆடி யீறாக
     இரண்டிரண் டாக வேற்கு மென்ப.