பக்கம் எண் :
 
பொருளதிகாரம்218முத்துவீரியம்

என்பது, முற்கூறியவை, ஆவணி புரட்டாசி கார்காலம்; ஐப்பசி கார்த்திகை
கூதிர்க்காலம்; மார்கழி தை முன்பனிக்காலம்; மாசி பங்குனி பின்பனிக்காலம்; சித்திரை
வைகாசி இளவேனிற் காலம்; ஆனி ஆடி முதுவேனிற்காலம்; இளவேனி லெனினும் வசந்த
மெனினும் ஒக்கும். (12)

சிறுபொழுது

781. மாலை யாமம் வைகறை யெற்பாடு
     நண்பகற் சிறுபொழுது தைவகைத் தாகும்.

என்பது, சிறுபொழுது - மாலை யாமம் வைகறை எற்பாடு நண்பகல் என ஐந்து
வகைப்படும், எற்பாடெனினும் விடியலெனினு மொக்கும்.

(வி-ரை.) அவற்றுள் மாலையாவது, நிசியின் முன்னும் எற்பாட்டின் பின்னும்
உண்டாகிய காலம். யாமமாவது இடையிரவு வைகறையாவது, விடியற்காலம்.
எற்படுகாலையாவது, ஆதித்தன் படுகிறபொழுது. நண்பகலாவது உச்சிப்பொழுது. (13)

முல்லைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்

782. காரு மாலையுங் காட்டிற் குரிய.

என்பது, கார்காலமும் மாலைப்பொழுதும் முல்லை நிலத்துக் குரியன. (14)

குறிஞ்சிக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்

783. கூதிரும் யாமமுங் குறிஞ்சிக் குரித்தே.

என்பது, கூதிர்க்காலமும் யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக் குரியன. (15)

அதற்குரிய பெரும்பொழுது

784. பனியெதிர் பருவமு முரிய வாகும்.

என்பது, முன்பனிக்காலமும் அக்குறிஞ்சிக்குரியன.

(வி-ரை.) எதிர்தல் - முன்னாதல். எனவே முன்பனியாயிற்று. (16)

மருதத்திற்குரிய சிறு பொழுதுகள்

785. வைகுறு விடியன் மருதக் குரிய.