பக்கம் எண் :
 
பொருளதிகாரம்219முத்துவீரியம்

என்பது, வைகறையும் விடியற்பொழுதும் மருதநிலத்துக் குரியன. (17)

நெய்தற்குரிய சிறுபொழுது

786. எற்பாடு நெய்தற் குரிய வாகும்.

என்பது, விடியற்பொழுது நெய்தல் நிலனுக்குரியன.

(வி-ரை.) படுதல் - தோன்றுதல், மறைதல் என இரு பொருள் படும். ஈண்டுத்
தோன்றுதல் என உரைகண்டு கதிரவன் தோன்றும் பொழுதாகிய விடியற்பொழுது எனக்
கூறினர். எனினும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் கதிரவன் மறைகின்ற பொழுது என்றே
உரை காண்பர். கற்பொடு புணர்ந்து கணவன் சொற்பிழையாது இல்லறம் நடத்தும் மகளிர்
விடியற்காலத்து இரங்குதல் மரபன்றாதலானும், காமநோய் காலையரும்பிப் பகலெல்லாம்
போதாகி மாலை யலரும் இயல்பினது ஆதலின் கதிரவன் மறைகின்ற பொழுது பிரிவுகண்டு
இரங்குவதே பொருந்துவதாதலானும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூற்றே
பொருந்துவதாகும். (18)

பாலைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்

787. நண்பகல் வேனி னடுத்திணைக் குரிய.

என்பது, நண்பகற்பொழுதும் வேனிற்காலமும் பாலை நிலனுக்குரியன.

(வி-ரை.) நடுத்திணை - பாலைத்திணை. நடுவுநிலைத்திணையென ஆள்வர்
தொல்காப்பியர். இப்பெயர் பெறுதற்குரிய காரணத்தை நச்சினார்க்கினியர் விளங்க வுரைப்பர்.
அது வருமாறு: பாலைக்கு நடுவணதென்னும் பெயர் ஆட்சியுங் குணனுங் காரணமாகப்
பெற்ற பெயர். ‘நடுவுநிலைத்திணையே நண்பகல் வேனில்’ (9) என ஆள்ப. புணர்தல்,
இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், நால்வகை
யுலகத்திற்கிடையிடையே.

‘‘முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்’’

(சிலப் - காடு - 64-66) என முதற்பொருள் பற்றிப் பாலை நிகழ்தலானும், நடுவணதாகிய
நண்பகற்காலந் தனக்குக் காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு
வைத்தலானும். உலகியற் பொருளாகிய அறம்பொரு ளின்பங்களுள் நடுவணதாய பொருட்குத்
தான் காரணமாகலானும் நடுவணதெனக் குணங்காரணமாயிற்று. (தொல் - பொருள் -
அகத் - நச் - 2) (19)