பக்கம் எண் :
 
பொருளதிகாரம்256முத்துவீரியம்

(வ.-று.)

எளிதன் றினிக்கனி வாய்வல்லி புல்லல் எழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்பி ரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு வாழி யறிவிப்பனே. (திருக். 50)

(கு-ரை.) செல்லல் வருத்தம்: ‘செல்லல் இன்னல் இன்னா மையே’ என்பது
தொல்காப்பியம்.

குறையுறத்துணிதல்

என்பது, பாங்கியை நினைந்து செல்பவன் தெய்வத்தினருளால் அவ்விருவரும்
ஓரிடத்து எதிர்நிற்பக் கண்டு, இவள் இவட்குச் சிறந்தாள், இனியென் குறையுள்ளது
சொல்வேனெனத் தன்குறை கூறத்துணியா நிற்றல்.

(வ-று.)

குவளைக் கருங்கட் கொடியே ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே. (திருக். 51)

(கு-ரை.) உவளை - அருகிலிருப்பவளை. துவளத் தலைவந்த இன்னல் - யான்
வருந்துமாறு வந்த துன்பம்.

வேழம் வினாதல்

என்பது, குறையுறத் துணியா நின்றவன் என்குறை இன்னதென்று இவளுக்கு
வெளிப்படக் கூறுவேனாயின், இவள் மறுக்கவுங் கூடுமென வுட்கொண்டு, என்குறை
யின்னதென்று இவள் தானே யறியுமளவுங் கரந்தமொழியாற் சில சொல்லிப் பின்
குறையுறுவதே காரியமென, வேட்டை கருதிச் சென்றானாக, அவ்விருவ ருழைச்சென்று
தன் காதல் தோன்ற, இவ்விடத்து ஒரு யானை வரக் கண்டீரோவென வினாவல்.

(வ-று.)

இருங்களி யாயின் றியானிறு மாப்பவின் பம்பணிவோர்
மருங்களி யாவன லாடவல் லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. (திருக். 52)