பக்கம் எண் :
 
பொருளதிகாரம்279முத்துவீரியம்

குலமுறைகூறி மறுத்தல்

என்பது, நீயே கூறெனச் சொல்லக்கேட்டு, உலகத்து ஒருவர் கண்ஒருவ ரொருகுறை
வேண்டிச் சென்றால், அக்குறை நீயே முடித்துக்கொள் ளென்பாரில்லை, அவ்வாறன்றி,
இவள் இந்நாளெல்லாம் என்குறை முடித்துத் தருவேனென் றென்னை யவமே யுழற்றி,
இன்று நின்குறை நீயே முடித்துக்கொள்ளென்னா நின்றாளெனத் தலைமகன் ஆற்றாது
நிற்ப, அவனை யாற்றுவிப்பது காரணமாக, நீர் பெரியீர், யாஞ்சிறியே மாதலான் எம்மோடு
நுமக்குச் சொல்லாடுதல் தகாதெனக் குலமுறை கூறி மறுத்துரைத்தல்.

(வ-று.)

தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமியெந் தேமொழியே. (திருக். 100)

நகையாடி மறுத்தல்

என்பது, இவள் குலமுறை கிளத்தலான் மறுத்துக் கூறிய வாறன்றென மனமகிழ்ந்து
நிற்ப, இனி இவனாற்றுவானென உட்கொண்டு, பின்னுந் தழை யெதிரா தெம்மையன்மாரேவுங்
கண்டறிவேம், இவ்வையர் கையில் ஏப்போலக்கொலையால் திண்ணியது கண்டறியே மென,
அவனேவாடல் கூறி, நகையாடி மறுத்துக் கூறல்.

(வ-று.)

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர் எய்கணை மண்குளிக்கும்
கலையொன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர் கையிற் கொடுஞ்சிலையே. (திருக். 101)

இரக்கத்தொடு மறுத்தல்

என்பது, இவளென்னுடனே நகையாடுகின்றது தழை வாங்குதற் பொருட்டென
உட்கொண்டு நிற்பப், பின்னையுந் தழையேலாது இவ்வையர் இவ்வாறு மயங்கிப் பித்தழையா
நிற்றற்குக் காரணமென்னோவென்று, அதற்கிரங்கி மறுத்துக் கூறல்.