பக்கம் எண் :
 
பொருளதிகாரம்389முத்துவீரியம்

யின்மையிற் றமதணையையே தமக்குத் துணையாகக் கொண்டு கிடந்த என்னைப் போல,
உயிர் தேய்வார் இனி யாவரோ வெனப், பொதுப்படப் பரத்தையர்க் கிரங்குவாள்
போன்று, தலைமகன் கொடுமை நினைந்து உரைத்து வாடியழுங்கல்.

(வ-று.)

அப்புற்ற சென்னியன் றில்லை யுறாரின் அவருறுநோய்
ஒப்புற் றெழினலம் ஊரன் கவரவுள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம் மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொல் ஆருயிர் தேய்பவரே. (திருக். 354)

கனவிழந்துரைத்தல்

என்பது, தலைமகன் கொடுமை நினைந்து கிடந்து வாடிய தலைமகள், கனவிடை
வந்து, அவன் மார்புதரத், தானதனை நனவென்று மயங்கிப் புலந்து, அவனோடு
புணராதிகழ்தமையைத் தோழிக்கு இயம்பா நிற்றல்.

(வ-று.)

தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்றில்லை சேரலர்போல்
ஆவா கனவு மிழந்தேன் நனவென் றமளியின்மேற்
பூவா ரகலம்வந் தூரன் தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற்றி லேன்விழித் தேனரும் பாவியனே. (திருக். 355)

விளக்கொடு வெறுத்தல்

என்பது, கனவிழந்தமை கூறி வருந்திய தலைமகள், நீயாயினுங் கலந்தவர்க்குப்
பொய்முகங் காட்டிக்கரத்தல் பொருத்தமன்று என்றிலையே யென, விளக்கொடு வெறுத்துக்
கூறாநிற்றல்.

(வ-று.)

செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி யிருண்முகங் கீழும் நெடுஞ்சுடரே. (திருக். 356)