பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்425முத்துவீரியம்

நேரிசைச் சிந்தியல் வெண்பா

906. நேரிசை போல விரண்டா மடியிற்
     றனிச்சொற் பெற்றொரு விகற்பத் தானுந்
     தனிச்சொற் பெற்றிரு விகற்பத் தானுந்
     மூன்றடி யாக முடிவது நேரிசைச்
     சிந்திய லென்மனார் தெளிந்திசி னோரே.

என்பது, நேரிசை வெண்பாவைப்போல இரண்டாமடியில் தனிச்சொற் பெற்று
மூன்றடியாக ஒருவிகற்பானும் இருவிகற்பானும் வருவது நேரிசைச் சிந்தியல்
வெண்பாவாகும்.

(வ-று.)

அறிந்தானை யேற்தி யறிவாங் கறிந்து
சிறந்தார்க்குச் செவ்வ னுரைப்பச், சிறந்தார்
சிறந்தமை யாராய்ந்து கொண்டு.

ஒருவிகற்பு.

நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே, பொற்றேரான்
பாலைநல் வாயின் மகள்.

இருவிகற்பு. (6)

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

907. இன்னிசை போலத் தனிச்சொ லின்றி
     ஒருவிகற் பானும் பலவிகற் பானும்
     வருவ தின்னிசைச் சிந்திய லாகும்.

என்பது, இன்னிசை வெண்பாவைப் போலத் தனிச்சொலின்றி மூன்றடியாக
ஒருவிகற்பானும் பலவிகற்பானும் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாகும்.

(வ-று.)

நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரில்
அறநாட்டுப் பெண்டி ரடி.

ஒருவிகற்பு.