குணவீர பண்டிதர்
இயற்றிய
நேமிநாதம்
----------------------------
மூலமும் உரையும்
பாயிரம்
1. பூவின்மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி
பெல்லா முணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து.
உரை: எந்நூலுரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்தே
நூலுரைக்க என்பது மரபாகலின் பாயிரமுரைத்தே நூலுரைக்கப்படும் என்க.
பாயிரம் என்பது
முகவுரை.
அப்பாயிரந்தான், பொதுவும், சிறப்பும் என இருவகைப்படும்.
அவற்றுட் பொதுப்பாயிரம் என்பது எல்லா நூன்முகத்தும் இன்றியமையாதது..
ஈவோன் றன்மை யீத லியற்கை
கொள்வோன் றன்மை கோடன் மரபென
ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே
என்பவாகலின்.
இனிச், சிறப்புப்பாயிரம் ஆவது பலவற்றுட் சிலவருமாறு:
1 பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
துன்னு பயனளவும் சொல்லினான் - முன்னைச்
சிறப்பா மவற்றுட் சிலவேறி னாலும்
பெறப்படுமாம் முன்னைப் பெயர்.
என்பவாகலின்.
----------------------------
1. வச்சணந்திமாலை, பொதுவியல், சூ. 21.
|