பக்கம் எண் :
 
110நேமி நாதம்

52.     தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்ச முற்றெண்
       அரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை
       தேற்றம் வினாவெண் ணெதிர்மறையுந் தேமொழியாய்
       ஈற்றிசையு மேகார மென்.

      
எ - ன்: உம்மை யிடைச்சொல்லும் ஏகார *இடைச்சொல்லும்
ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     
 இ - ள்: தெரிநிலையிடத்தும், ஆக்கத்திடத்தும், சிறப்பிடத்தும்,
எச்சத்திடத்தும், முற்றிடத்தும், எண்ணிடத்தும், எதிர்மறையிடத்தும்,
ஐயத்திடத்தும் என இவ்வெட்டிடத்தும் உம்மை இடைச்சொல் வரும்.
தேற்றத்தினும், வினாவினும், எண்ணினும், எதிர்மறையினும், ஈற்றசையினும்
ஏகார இடைச்சொல் வரும் எ-று.

      அவை வருமாறு: நன்றும் அன்று, தீதும் அன்று - இது
தெரிநிலையும்மை. நெடியனும் ஆயினான், வலியனும் ஆயினான் - இவை
ஆக்கவும்மை. ‘கைக்குமாந் தேவரே தின்னினும் வேம்பு' - இஃது இழிவு
சிறப்பும்மை. ‘அமிழ்தினு மாற்ற வினிது' - இஃது உயர்வு சிறப்பும்மை.
எச்சவும்மை இரண்டு வகைப்படும். இறந்தது காட்டலும் எதிரது போற்றலும்
என. சாத்தனும் வந்தான் என்றால் இவனொத்த பிறனொருவனையும்
விளக்கினமையின் இறந்தது காட்டும் எச்சவும்மை. சாத்தனும் வருவன்
என்றால் பின்னும் ஒருவன் வருவது காட்டுதலால் எதிரது போற்றல் என்னும்
எச்சவும்மை. ‘மூவாமுதலா வுலகமொரு மூன்றும்' என்பது முற்றும்மை.

நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் என்பன எண்ணும்மை. வருதற்கும்
உரியன் என்பது வாராமைக்கும் உரியன் என்னும் பொருள் பட்டமையான்

எதிர்மறையும்மை. எட்டானும் பத்தானும் உடையன் என்பது துணியாமை
நின்றமையான் ஐயவும்மை.


      ‘அரிதா மெதிர்மறை' என்ற வியப்பினால், உம்மை அசைநிலை
யாகவும் பெறும். அவன் மிகவும் நல்லன், அறவும் தீயன், ‘அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றா ணல்லளே' என்பன அசைநிலை. பிறவும்
அன்ன.
------------------------
* முன்னே ஈண்டு ‘எதிர்மறை இடைச்சொல்' என்று இருந்தது. ஈண்டு
ஏகார இடைச்சொல்லின் தேற்ற முதலிய பொருள்களுள் எதிர்மறைப்
பொருளும் கூறப்பெற்றிருக்கின்றதே அன்றி எதிர்மறை இடைச்சொல்
என ஒன்று கூறப்பெற்றிலது. இப்பிழை ஏடு எழுதுவோரால்
நேர்ந்ததாகும்.