பக்கம் எண் :
 
120நேமி நாதம்

      அவை வருமாறு: நிலங்கடந்தான், பொற்பூண், கருப்புவேலி, வரைவீ
ழருவி, யானைக்கோடு, குன்றத்துக்கூகை என வேற்றுமைத் தொகை
அடைவே கண்டுகொள்க. உவாப்பதினான்கு என்பது உம்மைத்தொகை;
தாழ்குழல், என்பது வினைத்தொகை; வட்டத்தடுக்கு என்பது பண்புத்தொகை;
வேய்த்தோள் என்பது உவமத்தொகை; பொற்றெடி என்பது
அன்மொழித்தொகை. இவை இருமொழி கூடின தொகை.

       ‘புலிவிற் கெண்டை' என்பதும் உம்மொழித் தொகை. இவை எல்லாம்
ஒரு சொற்போல வேற்றுமை ஏற்றலும், பயனிலை கோடலும் காலம்
தோன்றாமையும் கண்டுகொள்க. என்னை?

        
வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே
       வினையின் றொகையே பண்பின் றொகையே
       யும்மைத் தொகையே யன்மொழித் தொகையென்று
       அவ்வா றென்ப தொகைமொழி நிலையே. 
 (தொல். எச். 16)

       
‘எல்லாத் தொகையும் ஒருசொல் நடைப'    (தொல். எச். 24)


என்றாராகலின்.                                             (1)


                      
   இதுவும் அது

62.    உருபுவமை உம்மை விரியின் அடைவே
      உருபுவமை உம்மைத் தொகையா - மொருகாலந்
      தோன்றின் வினைத்தொகையாம் பண்புமிரு பேரொட்டுந்
      தோன்றுமேற் பண்புத் தொகை.

      எ - ன்: முன்பு சொல்லிப் போந்த வேற்றுமைத் தொகைக்கும்,
உவமத் தொகைக்கும் உம்மைத் தொகைக்கும், வினைத் தொகைக்கும்,
பண்புத் தொகைக்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: * உருபு விரியின் உருபுத்தொகையாம்; உவமை விரியின்
உவமத்தொகையாம்; உம்மை விரியின் உம்மைத்தொகையாம்; காலந் தோன்ற
வினை விரியின் வினைத்தொகையாம்; பண்பு விரியிற் பண்புத்தொகையாம்;
இருபெயரொட்டும் பண்புத்தொகை; இத்தொகைகளை அடைவே
கண்டுகொள்க.
-------------------------
* ஈண்டு விரியின் என்பதற்கு அத்தொடர்கள், உருபு முதலியன
விரிதற்கு இடமாய் இருப்பின், என்பது கருத்தாம் என்று கொள்க.