இருபெயரொட்டாவன: சுரிகைப்பத்திரம், புட்டகப் புடைவை,
வேழக்கரும்பு, கேழற்பன்றி, பெருமலைச்சிலம்பு, மீமிசை இவை முதலாக
வரும் பண்புத்தொகை என்றவாறு. என்னை?
வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.
உவமத் தொகையே யுவம வியல
வினையின் றொகுதி காலத் தியலும்
வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென்
றன்ன பிறவு மதன்குண நுதலி
யின்ன திதுவென வரூஉ மியற்கை
யென்ன கிளவியும் பண்பின் றொகையே
இருபெயர் பலபெய ரளவின் பெயரே
யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி
யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங்
கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே
(தொல். எச்ச. 17-21)
என்றாராகலின்.
அன்மொழித்தொகையும் செய்யும் என்னும்
சொல்ஈற்றின் முடிபும்
63. ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம் - மானனையாய்
செய்யுமெனும் பேரெச்சத் தீற்றின்மிசைச் சில்லுகரம்
மெய்யொடும்போம் ஒற்றொடும்போம் வேறு.
எ - ன்:
அன்மொழித் தொகை, விரியுமாறும், செய்யும் என்னும்
பெயரெச்சம் முடியுமாறும் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
வேற்றுமைத் தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை,
பண்புத்தொகை, உவமத்தொகை இவையிற்றின் இறுதிக்கண் வேறொரு பெயர்
தோன்ற வருமாயின் அவை அன்மொழித்தொகையாம். செய்யும் என்னும்
பெயரெச்சத்து இறுதியின் உகரம் கெடுதலும், உகர மும்மெய்யும் கெடுதலும்,
இரண்டினோடுங் கூடி இறுதியின் நின்ற மெய்யும் கெடுதலும் உண்டு எ-று. |