பக்கம் எண் :
 
124நேமி நாதம்

       தொகைச்சொல் இடைச்சொற்களின் ஒழிபு இலக்கணம்

65.    உலைவில் உயர்திணைமேல் உம்மைத் தொகைதான்
      பலர்சொல் நடைத்தாய்ப் பயிலும் - சிலைநுதலாய்
      முற்றும்மை எச்சப் படுதலுமுண் டாமிடைச்சொல்
      நிற்றலுமுண் டீறு திரிந்து.

    
 எ - ன்: தொகைச் சொல்லினும், இடைச் சொல்லினும் ஒழி
புணர்த்துதல் நுதலிற்று.

      
இ - ள்: தொகைச்சொல் ஒரு சொல்லாய் நடக்கும் என்றார்
ஆயினும், உயர்திணையிடத்து வந்த உம்மைத் தொகை
வினைப்படுக்குமிடத்துப் பலரைச் சொல்லும் வாசகத்தாற் சொல்லப்படும்.
முற்றும்மை எச்சப் பொருள் பெற்று நடக்கவும் பெறும். இடைச்சொற்கள்,
ஈறுதிரிவனவும் உள எ-று.

    
 வரலாறு: கபிலபரணர் வந்தார் என உம்மைத்தொகை
பலர்சொன்னடைத் தானவாறு. ஒருவனை என் காணம்பத்தும் தரவேணும்
என்ற விடத்துப் பத்துந் தரமுடியாது என்றால் முற்றும்மையாம். அவற்றுள்
சில கொள் என்னும் பொருள் தோன்றுகையால் எச்சவும்மை. மன்னை,
தில்லை, கொன்னை என ஈறு திரிந்து வந்தன.

      ‘உலைவில்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், உரிச்சொல்லும் ஈறு
திரிவனவும் உள. அவை - கடி என்பது கடும்புனல், கடுத்தபின் எனத்
திரிந்தது; பிறவும் அன்ன.                                    
(5)


 66.     இன்னரென முன்னத்தாற் சொல்லுதல் என்றசென்ற
        என்னும் அவையன்றி யிட்டுரைத்தல் - தன்வினையாற்
        செய்யப் படும்பொருளைச் செய்ததெனச் சொல்லுதலும்
        எய்தப் படும்வழக்கிற் கீங்கு.

       
 எ - ன்: வழக்கிடத்துக்காவன சில ஒழிபு கண்டு ஈங்குணர்த்துதல்
நுதலிற்று.

        
இ - ள்: இத்தன்மைய ரென்று சொற்குறிப்பால் அறிய
வருவனவும், என்னாதவற்றை என்றன என்றும் செல்லாதனவற்றைச் சென்றன
என்றும் சொல்லுதலும், சிலராற் செய்யப்பட்ட பொருளைத் தான் செய்தது
போலச் சொல்லுதலும் வழக்கிற்கு உரிய எ-று.