‘எய்தும் பெயர்' என்று மிகுத்துச் சொல்லியவதனாற் சொற்கள்
நிலைமொழி வருமொழி செய்தால் முன்மொழியிலே பொருள் நிற்பனவும்,
பின்மொழியிலே பொருள் நிற்பனவும், இருமொழியினும் பொருள் நிற்பனவும்,
இருமொழியும் ஒழிய வேறொரு மொழியிலே பொருள் நிற்பனவும் என
நான்கு வகைப்படும். அவை வருமாறு: அரைக்கழஞ்சு என்புழி
முன்மொழியிற் பொருள் நின்றது; வேங்கைப்பூ என்புழிப் பின்மொழியிற்
பொருள் நின்றது; தூணிப்பதக்கு என்புழி இருமொழியினும் பொருள் நின்றது;
பொற்றொடி என்புழி இருமொழியினும் பொருள் இன்றி இவற்றை உடையாள்
என்னும் வேறொரு மொழியிலே பொருள் நின்றது.
இனித் தோன்றிய சந்தியும், திரிந்த சந்தியும், கெட்ட சந்தியும்
ஆவன: யானைக்கோடு என்பது தோன்றிய சந்தி, மட்குடம் என்பது திரிந்த
சந்தி, மரவேர் என்பது கெட்ட சந்தி எனக் கொள்க.
சந்தியினை நாலென இயல்பு சந்தியுங்கூட்டிச் சிலர் சொல்ல இந்
நூலுடையார் இயல்பு சந்தியை நீக்கியது என்னையோ? எனின், இயல்பு
சந்திகளின் மிக்கும் திரிந்தும் கெட்டும் வருவன இல்லையாதலான், முடிக்க
வேண்டுஞ் சந்திகள் இல்லாமலே நீக்கினார் எனக்கொள்க.
‘செய்தமைத்தால்' என்றமையாற் சந்திகள் மும்மொழிக் கூட்டமாய்
இரண்டு சந்தி படுவனவும், இருமொழியாற் பொருள் வேறுபட்டு இரண்டு மூன்று சந்தி படுவனவும்
உளவாதலான், அவை, படும்பகுதி அறி்ந்து ஒருவன் கேட்ட சந்தியை நீ கருதிற்றியாது? எனக்
கேட்டு முடிக்கப்படும் எனக் கொள்க.
சிறுவழுதுணங்காய் என்புழிச் சிறுமை என நிறுத்தி,
வழுதுணங்காய் என வருவித்து முடித்தல் செய்க. சிறுவழுதுணை என நிறுத்திக், காய் என
வருவித்து முடித்தல் செய்யற்க. செம்பொன் பதின்பலம், பொன்னாழி,
பெண்ணீத்தார் என்பன. பலபொருள1 வாதலான், அவன்2 கருத்து அறிந்து
முடிக்க. பிறவும் அன்ன.
(12)
-------------------------
‘செம்பொன்பதின்பலம் என்பது: சொம்பொன்+பதின்பலம்,
செம்பு+ஒன்பதின் பலம் எனவும்; பொன்னாழி என்பது: பொன்+நாழி, பொன்+ஆழி, எனவும்;
பெண்ணீத்தார் என்பது; பெண்+ஈத்தார், பெண்+நீத்தார் எனவும் பிரிக்கப்பட்டுப்
பொருள் வேறுபடுதலின், ‘பல பொருள் ஆதலான்' என்றார் என்க.
அவன்-கேட்டவன்.
|