விடத்து ஏகாரத்தை ஐகாரமாக்கி வைரம் என முடிக்க. கேவலம் கைவலம்
என்று ஆயிற்று. வேதிகன் வைதிகன் என்பதும் அது. கோசலை என
நிறுத்தி, இதனுட் பிறந்தாள் யாவள்? எனக் கருதிய விடத்து ஓகாரத்தை
ஒளகாரமாக்கிக் கௌசலை என முடிக்க. சோமபுத்திரன் சௌமியன் என
முடிக்க; சௌமியனாவான் புதன். பிறவும் அன்ன.
(11)
புணர்ச்சியின் பொது இலக்கணம்
12 மெய்யீ றுயிரீ றுயிர்முதன் மெய்ம்முதலா
எய்தும் பெயர்வினையும் இவ்வகையே - செய்தமைத்தாற்
றோன்றல் திரிதல் கெடுதலெனத் தூமொழியாய்
மூன்றென்ப சந்தி முடிவு.
எ - ன்:
சந்தி முடிக்கப்படாநின்ற சொற்கள் இப்பகுதி
எனப் பொது
இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
சந்தி முடியுமிடத்து, மெய்யீறாய் மெய்ம் முதலாய்
வருவனவும், மெய்யீறாய் உயிர் முதலாய் வருவனவும், உயிரீறாய் உயிர்
முதலாய் வருவனவும், உயிரீறாய் மெய்ம்முதலாய் வருவனவும் என
இந்நான்கும்; பெயரீறாய்ப் பெயர் முதலாய் வருவனவும், பெயரீறாய் வினை
முதலாய் வருவனவும், வினையீறாய் வினை முதலாய் வருவனவும்,
வினையீறாய்ப் பெயர்முதலாய் வருவனவும் என இப்பகுதியாற் பிரித்தால்,
எழுத்துத் தோன்றி முடிவனவும், திரிந்து முடிவனவும், கெட்டு முடிவனவும்
என மூன்று வகையான் முடிக்கப்படும்
எ - று.
சொல்லுத் தோன்றியும், சொல்லுத் திரிந்தும், சொல்லுக் கெட்டும்
முடிவனவும் உளவெனக் கொள்க.
வ - று:
பொற்குடம் என்பது மெய்யீறாய் மெய்ம்முதலாய் வந்து
பெயரீறாய்ப் பெயர்முதலாயிற்று. பொன்னழகிது என்பது மெய்யீறாய்
உயிர்முதலாய் வந்து பெயர்முதலாய் வினையீறாயிற்று. உண்டோது என்பது
உயிரீறாய் உயிர்முதலாய் வந்து வினையீறாய் வினைமுதலாயிற்று. உண்டகை
என்பது உயிரீறாய் மெய்ம்முதலாய் வந்து வினைமுதலாய்ப் பெயரீறாயிற்று.
|