எண்பெயர் முறைபிறப் பளவியல் வடிவு
புணர்தலோ டேழும் பொருந்திய வழக்கே
என்றார் அவிநயனார்.
‘பூவின்...தொகுத்து'
என்பது சிறப்புப்பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று;
வணக்க மதிகார மென்றிரண்டுஞ் சொல்லச்
சிறப்பென்னும் பாயிரமாஞ் சீர்
என்றாராகலின்.
இதன் பொருள்: ஆயிரத்தெட்டு இதழுடைய அரவிந்த
நாண்மலர்மேல் எழுந்தருளியிருக்கும் ஆதிநாதன்
அடி துதித்து, யாவரும்
உணர எப்பெற்றிப்பட்ட எழுத்து முடிபுகளும் சுருங்கும் வகையாற்
சொல்லுவன் என்றவாறு.
இது பொழிப்புரை எனக் கொள்க.
பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப்
பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே.
‘சொல்லால் உரைப்பன்' என்றது என்னை? பிறவாற்றானும் உரைக்குமாறு
உண்டோ? எனின், உண்மை
சொல்லுதல் குற்றம் அன்று; கண்ணாற்
பார்த்தான் வாயாற் சொன்னான் என்றாற்போல என்க.
அன்றியும்,
எழுத்திலக்கணத்தைச் சொல்லால் உரைப்பது என்னாதபொழுது
சொல்லிலக்கணத்தைச்
சொல்லால் உணர்த்தி, எழுத்திலக்கணத்தை
எழுத்தான் உணர்த்துபவோ? என்று
கருதுவார்க்குச் சொல்லிலக்கணஞ்
சொல்லால் உணர்த்தி, எழுத்திலக்கணமுஞ் சொல்லால்
உணர்த்துப என்றற்கு
இங்ஙனம் சொல்லப்பட்டது. என் போல எனின், இரும்பினான்
மரத்தொடக்கத்தனவற்றை
அறுப்பார் அவ்விரும்புதன்னையும் இரும்பினால்
அறுப்பார்! அது போல எனக் கொள்க. 1
----------------------------
1.
வயிர வூசியும் மயன்வினை இரும்பும்
செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்
தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே.
என்னும் ஆசிரியர் அகத்தியனார் சூத்திரத்தையும் ஈண்டு நோக்குக.
|