பக்கம் எண் :
 
எழுத்து அதிகாரம்35

     எ - ன்: சில எண்மொழிகள் முடிபு பெறுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

   
 இ - ள்: நிலைமொழியின் முதல் நின்ற உயிர் குற்றுயிராயின்,
வருமொழிக்கு முதலாக உயிர் வந்தால் முன்னின்ற குற்றுயிர் நெட்டுயிராம்;
முதல் நின்ற உயிர் நெட்டுயிராயின், வருமொழிக்கு முதல் உயிர்மெய்
வந்தால் முன்னின்ற நெட்டுயிர் குற்றுயிராம். பத்து என்பது வருமொழியாயின்
அதன் இடையினின்ற ஒற்று ஆய்தம் ஆகவும் பெறும்; உம்மையால் ஆய்த
மாகாது ஏய்ந்த ஒற்றுக்கெட்டு முடியவும் பெறும். இன்னும் பத்து என்பது
வருமொழியாயும் நிலைமொழியாயும் வரில், அம்முறையே பகரத்தில் அகரம்
நீண்டும் நீளாதேயும் இடையும் இறுதியுங் கெட்டு ஈற்றொற்றாகிய னகர மிகும்
எனவறிக. எ - று.

      
  எண் என்பது மத்திம தீபம். என்னை?

      
   புனையுறு செய்யுட் பொருளை யொருவழி
         வினைநின்று விளக்கினது விளக்கப் படுமே. 


       
  முதலிடை கடையென மூவகை யாயின 
         என்பது அணியியல் ஆகலின்.

      
 வ - று: இரண்டு என நிறுத்தி, ஒன்று என வருவித்து,
அண்டென்னும் பதத்தைக் கெடுத்து, ரகர வொற்றிலே உயிரை ஏற்றி முதல்
உயிரை நீட்டி, ஈரொன்று, ஈராயிரம் என முடிக்க.

        ஆறு என நிறுத்தி, மூன்று நான்கு என வருவித்து, முதலுயிரைக்
குறுக்கி, அறு மூன்று, அறு நான்கு என முடிக்க. அறுபது என்பதும் அது.
இவை நீளுவதும் குறுகுவதும், ஐந்தும் எட்டும் ஒன்பதும் ஒழிய எனக்
கொள்க.

         ஏழு என நிறுத்திப் பத்து என வருவித்தால் எழுபஃது
என்றுமாம்; ஒருபஃது, முப்பஃது என்பனவும் அது.

        ஆய்தமாகாது அவ் வொற்றுக் கெட்டு, எழுபது என இயல்பாய்
நிற்கவும் பெறும். அது பெறுமா றென்னையோ? எனின், ஆய்தமுமாம்
என்றதனால் ஆகாமையும் பெறப்பட்டது. பத்து என நிறுத்திப் பத்து என
வருவித்து, இன்சாரியை கொடுத்துப் பதின் பத்து என முடிக்க. பதிற்றுப்
பத்து என்பதும் அது.