இவையும் ஞாபகத்தாலே 1 பெற்றன. ஆறு என நிறுத்திப்
பத்து
என வருவித்தால் பந்நீண்டு இடையும் இறுதியும் கெட்டு னகர மிகுந்து,
அறுபான் என்றாகும். பத்து என நிறுத்தி, இரண்டென வருவித்தாற்
பந்நீளாது இடையும் இறுதியும் கெட்டு, னகர மிகுந்து, பன்னிரண்டு என
முடியவும் பெறும். மற்று என்ற மிகையாற் பத்து என நிறுத்தி, மூன்று என
வருவித்தால் இன்சாரியை பெற்று, பதின் மூன்று எனவும், பன்மூன்று எனவும்
முடிந்தவாறு கண்டுகொள்க. இவையும் பத்து என்று நின்ற எண் முடிவு
பெற்றவாறு.
(20)
இதுவும் அது
21. ஒன்பா னொடுபத்து நூறதனை ஓதுங்கால்
முன்பாந் தகரணள முன்பிரட்டும் - பின்பான
எல்லாங்கெட் டாறிரண் டாவி 2 யின்பின் வல்லுகரம்
3
நல்லாய் 4 இரமீறாய் நாட்டு.
எ-ன்;
இதுவுஞ் சில வெண் முடிபு பெறுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்;
தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணைச்
சொல்லுமிடத்து, ஒன்பானுடன் பத்தும் நூறும் புணருங்கால் ஒன்பான்
என்னும் எண்ணின் முதனின்ற ஒகரம் தகர ஒகரமாம்; இடை நின்ற னகர
ஒற்று ணகர ளகரமாய் இரட்டும்; பின் முன்னின்ற எழுத்தெல்லாங் கெட்டு,
ஊகாரமும் ஆகாரமும் பெற்று, றகர உகரமும் இகரமும் ஈராய் முடியும்
எ - று.
வ - று:
ஒன்பான் என நிறுத்தி, பத்து என வருவித்து, ஒகரத்தைத்
தகர ஒகரமாகத் தொ என நிறுத்தி, இடை நின்ற னகர ஒற்றை
------------------------------
1. ஞாபகம் ஆவது இன்னது என்பதனைப் பேராசிரியர் தொல்.
பொருள். மரபியல். 110-ஆம் சூத்திர உரையில், ‘ஞாபகங்கூறல்,
சூத்திரஞ் செய்யுங்கால், அதற்கு ஓதின இலக்கண வகையானே
சில்வகை எழுத்தின் செய்யுட்டாகவும், நாடுதலின்றிப் பொருள் நனி
விளங்கவும் செய்யாது, அரிதும், பெரிதுமாக நலிந்து செய்து மற்று
அதனானே வேறு பல பொருள் உணர்த்தல், என்றதனாலே அறிக.
2. ஆறு இரண்டு ஆவி - ஆறாம் உயிராகிய ஊகாரமும்,
இரண்டாம் உயிராகிய ஆகாரமும் ஆம் என்று கொள்க.
3. வல் உகரம் என்றது ஈண்டு ஏற்புழிக் கோடலால், றகர உகரமாம்
என்று கொள்க.
4. ‘ நல்லாய்' என்பது மகடூஉ முன்னிலை.
|