பக்கம் எண் :
 
38நேமி நாதம்

       சேயிழை என்றால் செம்மை என நிறுத்தி, இழை என வருவிக்க.
இவை, இவ்வகை நிறுத்திப் படும் பகுதி அறிந்து முடிக்க.

       அன்றியும், வெண் என நிறுத்தி, அவா எனவும் ஆகாது; மூ என
நிறுத்தி, ஆறு எனவும் ஆகாது; வெள் என நிறுத்தி, ஆடை எனவும்
ஆகாது; சேய் என நிறுத்தி இழை எனவும் ஆகாது. என்னை?

       
 இருபொரு ளியைதலி னப்பொருள் படுமொழி
        யிதுவென வேறுவைத்தி சைத்தல் வேண்டும் 


     
என்றாராகலின்.


      
 இடைச்சொல் வருமாறு:


       
 அவைதாம்
        இன்னே அற்றே அத்தே அம்மே
        ஒன்னே யானே அக்கே இக்கே
        அன்னென் கிளவி யுளப்படப் பிறவும்
        அன்ன என்ப சாரியை மொழியே.   
  (தொல். புணரி. 17)


       எனக் காண்க. அவை சில வருமாறு: பதினெண்கணம் என்பது இன்
சாரியை வந்தது. பலவற்றுக்கோடு என்பது வற்றுச் சாரியை வந்தது.
வெயிலத்துச் சென்றார் என்பது அத்துச் சாரியை வந்தது. புளியங்காய்
என்பது அம்முச் சாரியை வந்தது. ஆறன் மருங்கு என்பது அன் சாரியை
வந்தது. தாழக்கோல் என்பது அக்குச் சாரியை வந்தது. கழச்சிக் கோல்
என்பது இக்குச் சாரியை வந்தது. பதிற்றுப்பத்து என்பது இற்றுச் சாரியை
வந்தது. கலனே தூணிப் பதக்கு என்பது ஏ என்னுஞ் சாரியை வந்தது.
பிறவும் அன்ன,

       தோழியுங் கலுழ்மே  என்புழிக் கலுழுமே என்ற ழகரத்தி்ல் உகர
உயிர் கெட்டு முடிந்தது. பிலத்துவாய் என்பது பிலவாய் என ஒற்றும் உயிர்
மெய்யும் கெட்டுமுடிந்தது. யாம் போகும் புழை என்பது போம் புழை என்று
உயிர்மெய் கெட்டது. அரியும் வாள் என்பது அரிவாள் என உயிர்மெய்யும்
ஒற்றும் கெட்டது. 1                                        
(22)
--------------------------
1.      ஈண்டு மேவியசுட் டாங்கே மிகும்.  என்றதற்கு உதாரணம்
காட்டப்படவில்லை. அன்றியும் இந் நூலின் உரையாசிரியர்
இச்சூத்திரத்தின் கருத்துரையில்  சொற்கள் பகுதி விகுதி
செய்யுமாறுமாம்  என்றார். ஈண்டு அதற்கும் உதாரணம்
காட்டப்படவில்லை. ‘வேணவா' என்பது முதலியன தொடர்மொழிகள்
ஆதலின், அவற்றைப் பிரித்துக் காட்டியது அவற்றுள், நிலைமொழி,
வருமொழிகளைப் பிரித்துக் காட்டியதாம் அன்றிப் பகுதி
விகுதிகளைப் பிரித்துக் காட்டியது ஆகாது. இவ்வுரையாசிரியர்
நிலைமொழி வருமொழிகளையே பகுதி விகுதி என்கின்றார் போலும்.