பக்கம் எண் :
 
40நேமி நாதம்

       வ - று: வேட்கை என நிறுத்தி, அவா என வருவித்து, ‘ஆங்குயிர்
மெய்போம்'1 என்பதனால் ககர ஐகாரத்தை அழித்து, டகாரத்தை
ணகாரமாக்கி, உயிரை ஏற்றி வேணவா என முடிக்க.

       வெண்மை என நிறுத்தி, அலரி என வருவித்து, மகர ஐகாரத்தை
அழித்து, ணகாரத்தை ளகாரமாக்கிக், ‘குற்றொற்றிரட்டு முயிர்வந்தால்' 2
என்பதனால் ஒற்றை இரட்டித்து, உயிரை ஏற்றி வெள்ளலரி என முடிக்க.

       வெள்ளோலை என்பதும் அது.

       மூன்று என நிறுத்தி, காதம் என வருவித்துத், தகரத்துக்கு முன்னே
வகர உயிர்மெய்யை மிகுத்து மூன்று காவதம் என முடிக்க.

       ‘வந்துறழு மன்ன வயன லக்கள்' என்பதனான், தொல்காப்பியன் என

நிறுத்தி, இவனாற் செய்யப்பட்டது யாது எனக் கருதின பொழுது
தொல்காப்பியம் என முடிக்க. அவிநய மென்பதும் அது.

       கலம் கலன், புலம் புலன், நிலம் நிலன் இவை னகரமு மகரமும்
மயங்கின.

       கோயில் கோவில் இவை யகரமும் வகரமும் மயங்கின.

       மென்மை என நிறுத்தி, இயல் என வருவித்து மகர ஐகாரத்தை
அழித்து னகரத்தை லகரமாக்கி  குற்றொற் றிரட்டு முயிர்வந்தால்  3
என்பதனால் ஒற்றை இரட்டித்து, இகரத்தை ஏற்றி மெல்லியல் என முடிக்க.

       'எல்லா முடியும்' என்பதனால் முன் என நிறுத்தி, இல் என
வருவித்து, நடுவு றகர வொற்றை மிகுத்து முன்றில் என முடிக்க.
பொன்னந்தார் பொலந்தார் என்பதும் நலங்கிள்ளி என்பதும் அது. பிறவும்
அன்ன.                                                   
(24)

                        
எழுத்ததிகாரம் முற்றும்.
-------------------------
1. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 22.
2. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 15.
3. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 15.