பக்கம் எண் :
 
80நேமி நாதம்

பெயராயின் அளபெடுத்தபடியே இயல்பாய் நின்று விளியேற்கும் எ-று.

      அவை வருமாறு: குரிசில்-குரிசீல், தோன்றல்-தோன்றால், மக்கள்-
மக்காள் என ஈற்றயல் நீண்டு விளியேற்றன. மகள்-மகளே, மருமகள்-
மருமகளே என முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்றன. திருமால்,
கருமால், சிறியாள், பெரியாள்  இவை முன்பே அயல் நெடிலாய் நிற்றலால்,
இயல்பாய் விளியேற்றன.

      துன்னும் என்று மிகுத்துச் சொல்லியவதனால்,  தொழிலும், பண்பும்
ளகார ஈறாயின், இயல்பாய் நின்று வெளியேற்கும் என்றவாறு. அவையாவன:
துணையிருந்தாள், வைய மளந்தாள், செய்யாள், கரியாள் என்பன.
அளபெடைப் பெயர்,

    
  மாஅ னிறம்போல மழையிருட் பட்டதே
      கோஒன் குலக்கோடு கொண்டு. 


என அளபெடை அளபெடுத்தபடியே நின்று விளியேற்றது.

       ஆற்ற  என்று மிகுத்துச் சொல்லியவதனால், உயர்திணையிடத்து
யகாரமாய் விளியேற்பனவும் உள.  விளங்குமணிக்கொடும்பூணாய்  1 என
விளியேற்றது. பிறவும் அன்ன.


விரவுப்பெயரும் அஃறிணைப் பெயரும் விளி ஏற்கும்
வகையும், சேய்மை விளியில் மூவகைப் பெயரும் மாத்திரை
மிகும் வகையும்
     

29. விரவுப்பேர் எல்லாம் விளிக்குங்கால் முன்னை
   மரபிற்றாம் அஃறிணைப்பேர் வந்தால் - மரபிற்
   கொளவருமே காரமும் கூவுங்காற் சேய்மைக்
   களவிறப்ப நீளும் அவை.

    
எ - ன்:  விரவுப்பெயரும், அஃறிணைப்பெயரும் விளி ஏற்குமாறும்,
மூன்றுவகைப் பெயரும் சேய்மைவிளி ஏற்குமிடத்து மாத்திரை மிகும்
என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.
--------------------------------------------------------------------
      1. புறம். செ. 130.


                          "விளங்குமணிக் கொடும்பூணாஅய்  என்பது புறநானூற்றுப்
பாடம். அஃது ஈண்டு அளபெடை நீக்கி ளகர மெய்யீறு யகர
மெய்யீறு ஆதற்குக் காட்டப்பட்டது.