பன்மையில் வழுவிற்று என உயர்திணை யஃறிணைமேற் சென்று
வழுவினவாறு கண்டு கொள்க. அது வந்தான் என அஃறிணை ஒருமை
உயர்திணை ஆண்பால் ஒருமையில் வழுவிற்று. அது வந்தாள் என
அஃறிணை ஒருமை உயர்திணைப் பெண்பால் ஒருமையில் வழுவிற்று. அது
வந்தார் என அஃறிணை ஒருமை உயர்திணைப் பன்மையில் வழுவிற்று.
அவை வந்தான் என அஃறிணைப் பன்மை உயர்திணை ஆண்பால்
ஒருமையில் வழுவிற்று. அவை வந்தாள் என அஃறிணைப் பன்மை
உயர்திணைப் பெண்பால் ஒருமையில் வழுவிற்று. அவை வந்தார் என
அஃறிணைப் பன்மை உயர்திணைப் பன்மையில் வழுவிற்று. என இவை
அஃறிணை உயர்திணைமேற் சென்று வழுவினவாறு கண்டு கொள்க. இவை
பன்னிரண்டும் திணை வழு.
பால் வழு ஆவன: அவன் வந்தாள் என ஆண்பால் பெண் பாலில்
வழுவிற்று. அவன் வந்தார் என ஆண்பால்ஒருமை பன்மையில் வழுவிற்று.
அவள் வந்தான் என உயர்திணைப் பெண்பால் ஆண் பாலில் வழுவிற்று.
அவள் வந்தார் எனப் பெண்பால்ஒருமை பன்மைப் பாலில் வழுவிற்று.
அவர் வந்தான் என உயர்திணைப் பன்மை ஆண்பால் ஒருமையில்
வழுவிற்று, அவர் வந்தாள் என உயர்திணைப் பன்மை பெண்மைப் பால்
ஒருமையில் வழுவிற்று. அது வந்தன என அஃறிணைஒருமை பன்மையில்
வழுவிற்று. அவை வந்தது என அஃறிணைப்பன்மை ஒருமையில் வழுவிற்று.
என இவை இருபதுங்கண்டுகொள்க.
இனி, வினை நிற்பப் பெயர்மேல் வந்து வழுவின இருபதும் வருமாறு:
வந்தது அவன், வந்தன அவன், வந்தது அவள், வந்தன அவள். வந்தது
அவர், வந்தன அவர் என அஃறிணை வினை நிற்ப உயர்திணைப்
பெயர்மேல் வழுவிற்று.
வந்தான் அது, வந்தாள் அது, வந்தார் அது, வந்தான் அவை,
வந்தாள் அவை, வந்தார் அவை என உயர்திணை வினை நிற்ப
அஃறிணைப் பெயர்மேல் வழுவிற்று.
வந்தான் அவள், வந்தான் அவர், வந்தாள் அவன், வந்தாள்
அவர்,
வந்தார் அவன், வந்தார் அவள், வந்தன அது, வந்தது அவை என வினை
நிற்பப் பெயர்மேல் வந்து பால்வழுவினவாறு கண்டு கொள்க.
வினாவழு ஆவது: கறக்கின்ற எருமை சினையோ பாலோ வென்றல்.
|