பக்கம் எண் :
 
54நேமி நாதம்

       பெண்மை யரசே மகவே குழவி
      தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
      காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று
      ஆவறு மூன்று முளப்படத் தொகைஇ
      யன்ன பிறவு மவற்றெடு சிவணி
      முன்னத்தி னுணருங் கிளவி யெல்லா
      முயர்திணை மருங்கி னிலையின வாயினும்
      அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்    

         (தொல்.கிளவி. 56)


 என்றார் ஆகலின். பிறவும் அன்ன.

      ‘அயர்வி லஃறிணை' என்று மிகுத்துச் சொல்லியவதனால் இவற்றுள்,
உயர்திணையாய் நடப்பனவும் உள. அவை: வேந்து நல்லன், குடிமை
நல்லன், உடம்பு மெலிந்தான் எனவுங் கொள்க. பிறவும் அன்ன.

(9)


             
திணைவழுவமையும் அருத்தாபத்தியும்


        (
அருத்தாபத்தி மரபு வழுவமைதியின்பால் அடங்கும்)

10.  எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையா
    எண்ணிவியங் கொள்க இருதிணையும் - எண்ணினாற்
    றன்மையாம் அஃறிணையும் சொன்னமொழி தன்னினத்தை
    உன்னி முடித்தலும் உண்டு.

   
எ - ன்: வழு வமைத்தலும் அருத்தாபத்தியும் ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

   
இ - ள்: உயர்திணையையும் அஃறிணையையும் கூட எண்ணி
அஃறிணையாலே முடித்தலும், இரு திணையையும் கூட எண்ணி ஒக்க
வியங்கொள்கையும், அஃறிணையையும் தன்மைச் சொல்லோடே கூட
எண்ணித் தன்மைச் சொல்லாலே முடித்தலும், எடுத்த மொழி தன்னினத்துப்

பொருளைக் காட்டலும் உடைய எ-று.

அவை வருமாறு:

     
 வடுக ரருவாளர் வான்கரு நாடர்
      சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங்
      குறுகார் அறிவுடை யார் 


எனவும்,