இ - ள்:
ஒரு பொருளை உயர்த்தும், இழித்தும்,
உவந்தும்,
சிறப்பித்தும் சொல்லும் பொழுது, திணையும் பாலும் மயங்கி வரப்பெறும்;
வழக்கினானும் தகுதியானும் நடக்கும் சொற்கள் வழுவல்ல; தொன்று தொட்டு
வருதலால் எ-று,
தகுதி மூன்று வகைப்படும்; குழுவின் வந்த குறுநிலை வழக்கும்,
இடக்கரடக்கிக் கூறுதலும், மங்கல மரபினாற் கூறுதலும் என.
அவை வருமாறு: குரிசில் வந்தது, பெருவிறல் வந்தது இவை
உயர்வுபற்றி வந்தன.
பொறியறை வந்தது, குருடு வந்தது என இரண்டும் இழிவுபற்றி வந்தன.
என் யானை வந்தது என்ப ஒருவனை; என் பாவை வந்தது என்ப
ஒருத்தியை; எந்தை வந்தா னென்ப ஓர் எருத்தினை; என் அன்னை
வந்தாள் என்ப ஓர் பசுவினை; இவை உவப்புப்பற்றி வந்தன. பெருவிறல்
வந்தது, கூற்று வந்தது இவையும் உவப்பு.
சாத்தனார் வந்தார், நரியார் வந்தார் என இவை சிறப்புப்பற்றி
வந்தன.
என இவை பாலும் திணையும் மயங்கினவாறு கண்டுகொள்க. என்னை?
உவப்பினு முயர்வினு மிழிப்பினுஞ் சிறப்பினும்
பாலுந் திணையு மயங்குதல் வரையார்
என்பவாகலின்.
சிறிது பெரிது என்கையும், கிழக்கு மேற்கு என்கையும், வெள்ளாடு
என்கையும் இவை வழக்கால் நடைபெற்றன.
யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும், வண்ணக்கர் காணத்தை
நீலம் என்றலும், பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றலும் இவை குழுவின்
வந்த குறுநிலை வழக்கு.
கான்மேல் நீர்பெய்து வருதும், கண்கழீஇ வருதும், கைகுறியாயிருந்தார்,
இது தீண்டாத பொழுது, பிள்ளைப்பேறு, பொறையுயிர்த்தார் என்பன
இடக்கரடக்கிக் கூறுதல்.
ஓலையைத் திருமுகம் என்றலும், செத்தாரைத் துஞ்சினார் என்றலும்,
விளக்குப் பெருகிற்று என்றலும் இவை மங்கலமரபினாற் சொல்லின வெனக்
கொள்க. என்னை?
|