பக்கம் எண் :
 
58நேமி நாதம்

      தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும்
      பகுதிக் கிளவி வரைநிலை யிலவே.   
    (தொல். கிளவி. 17)

என்றாராகலின். ‘செயிர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், ஒருவன் ஒன்று
குறித்துச் சொன்னாற் றெரித்துச் சொல்லுக என்றவாறு. என்னை?

       குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி 
                                                                                                            (தொல். கிளவி. 55)
என்றாராகலின். அது வருமாறு:

     
  ஒல்லேங் குவளை புலாஅன் மகன்மார்பிற்
       புல்லெருக்கங் கண்ணி நறிது 
   

(தொல். கிளவி. 55, உரை)

என்னற்க.
       பல்லார்தோள் தோய்ந்து வருதலாற் பாய்புனல்
       நல்வய லூரநின் றார்புலால் - புல்லெருக்க
       மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையாற்
       காதற்றாய் நாறு மெமக்கு 

எனத் தெரித்துச் சொல்லுக.  உலற்ற மின்றிப் பயின்றார் ஒரு சான்றார்
மயிர்நீட்டி உலறி நின்றாரைக் கண்டு 2 ஒருவன், எம்பெருமான், உலறி
நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறி நின்றேன் என்னற்க. தனக்கு
உற்றதுரைத்து இது காரணத்தால் உலறி நின்றேன் என்க.  பிறவும் அன்ன.
                                                                                                                                             (கக)
-------------------------
        1. மேற்படிச் சூத்திரத்தின் உரையில் சேனாவரையரும்,
நச்சினார்க்கினியரும் ‘ஒல்லேம்' என்று பாடங்காட்டி இருக்கின்றனர்.
அவர்கள் முறையே,  ஒல்லேம்........நறிது' என்புழிக் குவளை
புலால்நாறுதற்கும், எருக்கம் கண்ணி நறிது ஆதற்கும் காரணம்
கூறாமையின் வழுஆம் பிற எளின், புதல்வற் பயந்த பூங்குழல்
மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனொடு புலந்து
உரைக்கின்றாள் ஆதலின், குவளை புலால்நாறுதற்கு அவன்
தவற்றோடுகூடிய அவள் காதல் காரணம் என்பதூஉம், எருக்கம்
கண்ணி நறிது ஆதற்கு மகிழ்நன் செய்த துனிகூர்
வெப்பம் முகிழ் நகை முகத்தால் தணிக்கும் புதல்வன்மேல்
ஒருகாலைக்கு ஒருகால் பெருகும் அன்பு காரணம் என்பதூஉம்
பெறப்படுதலின், வழு ஆகாது என்பது   எனவும்;  ஒல்லேம்......நறிது,
எனத் தெரித்து மொழியாது ஆயிற்று ஆயினும். தலைவன் தவறும்,
புதல்வன்மேல் அன்பும் காரணமாகக் கூறலும் வழு அன்று என்றலும்
ஒன்று.   எனவும் கூறியவற்றை ஈண்டு நோக்குக.
      2. ‘ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறிநின்றாரைக் கண்டு.'
என்பதனை மயிர் நீட்டி உலறி நின்றாராகிய ஒரு சான்றாரைக் கண்டு
என இயைக்க.