"ஒருவினை யொடுச்சொ லுயர்பின் வழித்தே"
(தொல். வேற். மய. 8)
என்றாராகலின், அரசரொடு வந்தார் சேவகர், தாயொடு வந்தாள் மகள் என
இவை
உயர்பின் வழி வந்தவாறு. நாயொடு வந்தான் நம்பி என இது உபகார
உயர்ச்சிபற்றி வந்தது. பிறவும் அன்ன.
(1)
இதுவும் அது
22. இருசொல் இறுதி இரண்டேழ் அலாத
உருபு தொகாதென் றுரைப்ப - உருபுதான்
தொக்க விடத்துடனே தொக்கும் விரியுமிடத்
தொக்கவிரி சொல்லும் உள.
எ-ன்:
இதுவும் அப்பொருண்மேல் நின்றது.
இ-ள்:
இரண்டு சொல்லின் இடையின் எல்லா உருபும் தொக்கும்
விரிந்தும் நிற்கும் என்றார். இனி இரு சொல் இறுதி இரண்டாம்
வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஒழிய அல்லாத வேற்றுமைகள் விரிந்து
நிற்கும் தொகப் பெறா; வேற்றுமைகள் தொகும் இடத்துச் சில
சொற்களுடனே தொக்கும், விரியும் இடத்துக் கூட விரிந்தும் நிற்குஞ்
சொற்களும் உள என்றவாறு எ-று.
வ-று:
கடந்தான் நிலம், கடந்தான் நிலத்தை என்றும்,
இருந்தான்
குன்றத்து, இருந்தான் குன்றத்துக்கண் என்றும், இருசொல் இறுதி இரண்டாம்
வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் தொக்கும் விரிந்தும் நின்றன. இனிக்
குறைத்தான் மழுவினால், வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு,
வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது என நான்கு வேற்றுமையும்
இருசொல் இறுதியிற் றொகப் பெறாது விரிந்து நின்றவாறு. தொகிற் பொருள்
வேறுபட்டுக் கெடும்.
இனிக் குதிரைத்தேர் என்புழி மூன்றாம் வேற்றுமை தொக்கது. அது
விரியு மிடத்துக், குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என்று சில சொல்லோடே
விரிந்தது. கருப்புவேலி என்பதும் அது. பிறவும் அன்ன.
|