பக்கம் எண் :
 
சொல்லிலக்கணம்124
(எழுத்து இலக்கணத்திலேயே மிக முக்கியமானதாகிய) எழுத்துகளின் புணர்ச்சி விதிகளைக் கூறி முதல் இலக்கணத்தை நிறைவு செய்தோம். இனித் தொடர்ந்து நன்மைமிக்க புலவோர்களால் போற்றப்படுகின்ற முருகப் பெருமானைத் தியானித்துச் சொல் இலக்கணத்தையும் தொகுத்து உரைக்கத் தொடங்குகிறோம். அதனுள் முதலாவதாகப் பொதுவியல்பினைக் கூறலுற்றாம் என்றவாறு.
“எழுத்தியல் தொகையில் ஏற்றம் நாடில் அவை புணர் இயல்பே”1 என்னும் தம் கோட்பாட்டிற்கிணங்க எழுத்தின் புணர்ச்சியும் என்றார். குகற் கருதி என்றதனானே வாழ்த்தலும், வணங்கலும் உபலக்கணமாகப் பெறப்பட்டன. சொற்களின் நிறம் என்பது பற்றிப் பிற இலக்கண நூல்கள் கூறுவதில்லை. இவரே சொல்கிறார். இது பற்றியே புனைந்து உரைக்குதுமே என்கிறார்.
(166)
2.சொல்எனல் எழுத்துத் தனித்தும் சிற்சில
 புணர்ந்தும் வருவன; உதாரணம் புகலின்
 ஆஎனும் பெற்றப் பெயர்முதற் பலவும்
 தனிப்பொறிச் சொல்லாம்; மயில்எனும் ஒகரப்
 பெயர்முதற் பலவும் புணர்பொறிப் பதமே.
தனி எழுத்தாக (பொருளோடு) ஓர்எழுத்தொருமொழியாக வருவனவும், சிற்சில எழுத்துகள் சேர்ந்து தொடர்மொழியாக வருவனவும் சொல் எனப்படும். பசுவைக் குறிக்கின்ற ஓரெழுத்தொருமொழியாகிய ஆ முதலிய பல சொற்களும், மஞ்ஞையைச் சுட்டுகின்ற மயில் என்னும் தொடர்மொழி முதலிய பல பதங்களும் இதற்கு உதாரணங்கள் ஆம் என்றவாறு.
தொல்காப்பியர் சொற்களை, “ஓரெழுத்தொருமொழி” ஈரெழுத்தொருமொழி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி”2 என மூவகைப்படுத்துவார். இலக்கண விளக்கமும்