பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்123
2. சொல் இலக்கணம்
எழுத்திலக்கணத்தை 165 நூற்பாக்களால் நிறைவுசெய்த ஆசிரியர் அடுத்து நிறுத்தமுறையானே சொல் இலக்கணம் கூறத் தொடங்குகிறார். இந்த இரண்டாவது பெரும்பிரிவு பொது இயல்பு, பிரிவு இயல்பு, சார்பு இயல்பு, திரிபு இயல்பு என்னும் நான்கு உட்பிரிவுகளை உடையது.
பொதுவாக இலக்கணங்கள் சொல்லதிகாரத்தில் சொற்களைப் பெயர், வினை, உரி, இடை எனப் பிரித்துக்கூறி, திணை, இடம், பால், வேற்றுமை போன்ற சிறப்பிலக்கணங்களை விரித்துக் கூறும். இவர் வேறொரு புதிய நெறியில் செல்ல முயல்கிறார்.
I. பொதுவியல்பு
எழுத்துகளால் சொற்கள் ஆகின்றன என்பதும், சொற்களின் பெருக்கம் நிகண்டுகளால் அறியப்படும் என்பதும், சொற்கள் வழக்கில் திரிந்து வழங்கும் என்பதும், சொற்களின் நிறங்களும், திசைச்சொல் ஆட்சியும் இப்பொதுவியல்பில் கூறப்படும். இது மொத்தம் பதினாறு நூற்பாக்களைக் கொண்டது. சொற்களைப்பற்றிய பொதுவான சில செய்திகளை அறிவிப்பதால் இது பொதுவியல்பு எனப்பட்டது.
இவ்விலக்கணத்தின் தலைச்சூத்திரத்தில் தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் கூறி இதனைத் தற்சிறப்புப் பாயிரமாக்குகிறார்.
1.எழுத்தின் புணர்ச்சியும் இவ்வாறு ஓதி
 முதல்இலக் கணத்தை முடித்தனம்; அடுத்து
 நல்இயற் புலவோர் நவில்குகற் கருதிச்
 சொல்இலக் கணமும் தொகுக்குதும்; அதனுள்
 பொதுஇயல்பு அதனைமுற் புனைந்துஉரைக் குதுமே.