பக்கம் எண் :
 
சொல்லிலக்கணம்126
4.தமிழ்ச்சொற் பெருக்கைத் தரணியிற், புலவோர்
 அவையில், சேந்தன் காங்கே யன்ஆதியர்
 நூல்களில் தேறி நுவல்வது கடனே.
தமிழ்மொழியில் உள்ள சொற்களின் மிகுதியை மக்களின் பேச்சு வழக்கிலும், புலவர்களின் கூட்டத்தில் கலந்து பழகியும், சேந்தனால் ஆக்குவிக்கப்பட்ட திவாகரம், காங்கேயனால் செய்யப்பட்ட உரிச்சொல் போன்ற நிகண்டு நூல்களிலும் பார்த்துத் தெளிந்து பிறகு பிழையற இலக்கியத்தில் ஆளுதல் வேண்டும் என்றவாறு.
தரணி மக்களையும், புலவோர் அவை அங்குப் பயிலப்படும் இலக்கியங்களையும் ஆகுபெயராக உணர்த்தின. தரணியில் அவையில் என்புழி எண்ணும்மைகள் விகாரத்தால் தொக்கன. பரவை வழக்கை மக்களிடையிலும், இலக்கிய வழக்கை அறிஞர் கூட்டுறவாலும் அறிய வேண்டும். நிகண்டு நூல்கள் பெரும்பாலும் திரிசொற்களை அறியத் துணைபுரியும்.
(169)
5.ஒருமொழி ஒருவாறு உலகில் திரிந்து
 வழங்கல்உண்டு; உதாரணம் வருகிறவன் என்கை
 வாறவன் ஆனதும், கொண்டுவந்து என்கை
 கொண்டாந்து ஆனதும், ஏனடி என்கை
 ஏண்டிஎன்று ஆனதும், இனையன பலவும்
 வாசகத்து அன்றி வண்ணம் நாடகம்
 எனும்இரு பகுதியில் இசையினும் தகுமே.
இலக்கிய வழக்கிலிருந்தும் சில மொழிகள் பேச்சு வழக்கில் திரிந்து வழங்குதலும் உண்டு. வருகிறவன், கொண்டுவந்து, ஏனடி என இருக்கவேண்டியவை முறையே வாறவன் கொண்டாந்து, ஏண்டி என மருவி வழங்குதல் போன்ற பல இதற்கு எடுத்துக்காட்டுகளாம். இத்தகைய மரூஉ மொழிகளை இயற்றமிழில் அதிகம் பயன்படுத்தாமல் இசைத்தமிழ் நாடகத் தமிழ்ப்பகுதிகளில் ஆண்டாலும் ஏற்றுக் கொள்ளத்தக்கனவாம் என்றவாறு.