பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்127
இங்கு வண்ணம் என்பது ஒலிக்கட்டுக்கோப்போடு கூடிய இசைத்தமிழை உணர்த்திற்று. இசைத்தமிழும் நாடகத்தமிழும் பாமரரும் எளிதில் உணர்ந்துகொள்வதற்காக இயற்றப்படுதலின் அவற்றுள் இத்தகைய மரூஉ மொழிகள் தழுவி ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனினும் அங்கும் இத்தகைய சொல்லாட்சிமிக்க சிறப்பினையுடையது அன்று என்பதற்காக இசையினும் என உம்மை புணர்த்தார்.
170)
6.இயல்இசை நாடகம் என்னும்முத் தமிழ்ச்சொல்
 பொதிய மால்வரைப் பொழில்என இருண்டும்,
 உலவா முனிவோர் உடைஎனச் சிவந்தும்,
 வீழ்புனல் அருவியில் வெளுத்தும் தோன்றும்என்று
 அறிவார் மலர்த்தாள் அணிதலை எமதே.
இயல், இசை, நாடகம் என்ற தமிழின் முப்பிரிவுகளில் ஆளப்பட வேண்டிய சொற்கள் முறையே பொதியமலைச் சோலையைப்போல இருண்டும் (கரிய நிறமாகவும்) ஓரிடத்தில் நிலையாகத் தங்கி இராமல் சுற்றிக் கொண்டே இருக்கும் தவசிகளின் ஆடையைப்போலச் செந்நிறமாகவும், மலையருவியைப் போன்று வெண்மையாகவும் இருக்க வேண்டும். இதனை உணர்ந்து கொள்கின்ற அறிஞர்கள் எம் வணக்கத்திற்குரியவராவர் என்றவாறு.
முன்பே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று இந்நூலசிரியர் தமிழ்ச் சொற்களுக்குப் புதியன புகுதலாக நிறம் வகுக்கிறார். இந்நிறப்பகுப்பு சொற்பொருளின் அருமை, எளிமை நோக்கி வகுக்கப்படுகிறது என்பது பின்வரும் நூற்பாக்களால் விளங்குகிறது. இயல், இசை, நாடகம் ஆகியவை முறையே ஒன்றைவிட அடுத்தது எளிய நடையில் அமைய வேண்டும் என்பதே இந்நூற்பாவின் கருத்து ஆகும். இயல், இசை, நாடகப் பிரிவு பற்றி இந்நூலில் பின்னால் யாப்பிலக்கணத்தில் கூறப்படும்.
உலவாமுனிவோர் என்புழி அவாய்நிலையானே அருளை உடைய என வருவித்துக்கொண்டு குறையாத அருளினை