| வடமொழியாகிய அயல்மொழியின் வாய்பாடாகிய கணம் என்னும் யாப்பலகைத் தழுவிச் சில நூலாசிரியர் தமிழிலும் கணப்பொருத்தம் என்ற ஒன்றைக் கூறுவர். தமிழ்ப் புலவர்கள் (அயன் மொழிக்கே உரியதாகிய) அந்தக் கோட்பாட்டைத் தவிர்த்தலே சிறப்பாகும். ஒருகால் அத்தகைய பொருத்தத்தை ஏற்றுக் கொள்ளவேண்டிய இன்றியமையாமை ஏற்படினும் பாட்டுடைத்தலைவனகிய தெய்வத்தின் இயற்பெயர் எந்த கணத்தில் அமைகிறதோ அதனை (முதற்சீருக்கு) அப்படியே ஏற்றுக்கொள்ளல் நலமாம் என்றவாறு. | | தமிழ் யாப்பில் நேர், நிரை என்ற ஈரசைகள் அடிப்படை அலகுகளாக இருப்பதைப்போல் வடமொழி யாப்பில் எட்டு கணங்கள் முதல் அலகுகளாகக் கொள்ளப்படுகின்றன. மூன்று எழுத்துகளைக் கொண்ட ஒரு கூட்டம் கணம் எனப்படும். அவ்வெட்டு கணங்களும் ம, ந, ப, ய, ஜ, ர, ஸ, த என்று ஓரெழுத்துப்பெயர் கொண்டவை. மூன்று நெடில்கள் ‘ம’ கணம் என்றும், மூன்று குறில்கள் ‘ந’ கணம் என்றும் கூறப்படும். ஒரு நெடில் இருகுறில் ‘ப’கணம் எனவும், குறில்நெடில் நெடில் ‘ய’கணம் எனவும் பெயர் பெறும். குறில்நெடில்குறில் ‘ஜ’கணமாகவும், நெடில்குறில்நெடில் ‘ர’கண மாகவும் கொள்ளப்படும். குறில்குறில்நெடில் ‘ஸ’ கணமும், நெடில்நெடில்குறில் ‘த’ கணமும் ஆகும். | | வடமொழியில் மூவெழுத்துகளைக் கொண்ட கணம்உள்ளதால் போலும் தமிழ்ப்பாட்டியலாரும் முதற்சீர் மூன்றசைச் சீராகவே இருத்தல் வேண்டும் என்றனர். “மூவசை எண்சீர் கணம் என மொழிந்தனர்; ஈரசை நாலசை ஓரசை ஒழித்தே”1 “முன்மொழி யாகலான் மூவசைச்சீர் அலல்னநன்மைசால் தெய்வம் நவிலாமை”2 “கூறிய இலக்கணம் குறைபா டின்றித் தேறிய மூவசைச் சீர்முத லாக அகலக் கவிதான் அமையும் என்ப”3 என்று தமிழ்ப் பாட்டியல்கள் கூறுகின்றன. | |
|
|