பக்கம் எண் :
 
பொருளிலக்கணம்190
தெளிவான மெய்யறிவின் தன்மையை உணர்ந்தவராகிய அகத்தியர் வழிபாடு செய்ததால் அவருக்குஅருளின் தன்மையை உபதேசித்தருளியவராகிய முருகப் பெருமானை (எம்மை வருத்தும்)அறியாமையின் தன்மை நீங்குமாறு போற்றுகின்ற சிறப்புடையேமாதலின் பொருளிலக்கணத்தையும் ஒரு சிறிது கூறலுற்றாம் என்றவாறு.
இந்நூற்பா தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் கூறுவதால் பொருள் இலக்கணத்தின் தற்சிறப்புப்பாயிரம் ஆகிறது. பொருள் இலக்கணமும் என்பதில் உள்ள உம்மை எழுத்து, சொல் இலக்கணங்களைத் தழுவியது.
இவர் முந்தையோர் கண்ட முறையில் பொருளிலக்கணம் கூறவில்லை. புது முறையில் அமைத்துக் கொள்கிறார். மிக விரிவாகவும் கூறவில்லை. இவரே “அகப்பொருள் காமம் புறப் பொருள் சமர் என்று அறைந்துளார்; யாமும் அறுவகை இலக்கணத்து ஒருவா சொற்றுளம்; உணர்வது கடனே”1 என்கிறாராதலின் சிறிதே என்றார்.
(278)
2.அகப்பொருள் புறப்பொருள் அகப்புறப் பொருள்என
 முப்பொருள் கூறுதும் முறைப்படி உணர்ந்தே.
பொருளை முறையாக அகப்பொருள், புறப்பொருள், அகப் புறப்பொருள் என மூவகையாகப் பிரித்து அவற்றின் தன்மைகளை உணர்ந்து கூறுவாம் என்றவாறு.
தொன்மையான நூல்கள் அகம் புறம் என்னும் இரு பகுதிகளை மட்டுமே கூற, இவர் அகப்புறம் என்னும் மூன்றாவ தொன்றைப் புதியன புகுதலாக சேர்த்துக் கொள்கிறார்.
(279)
3.அகப்பொருள் இலக்கணம் அம்பிகை பாகனும்
 நந்தியம் பகவனும் நறைகமழ் மலர்உதிர்
 பொழில்மலி தமிழ்வரைப் புனிதமா தவனும்
 சீரிய புலமைத் திருவள் ளுவன்முதற்
 பலரும் கூறிடல் பார்மிசைக் கேட்டும்
 நாணுறாது இவ்வயின் நவிலல்உற் றனமே.