பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்189
3. பொருள் இலக்கணம்
சொல் இலக்கணத்தை 112 நூற்பாக்களால் நிறைவு செய்த ஆசிரியர் அடுத்து நிறுத்தமுறையானே பொருள் இலக்கணம் கூறத் தொடங்குகிறார். இப் பொருளிலக்கணம் பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை அவர்கள் கூறுவதுபோல் புத்தமைப் புடையது. அவர், “அகமும் புறமுமாய் எழுதிணை பற்றிக் களவு, கற்பு என்றும், வெட்சி, வஞ்சி முதலியனவாகவும் உரைக்கும் பொருள்இலக்கண மரபு பண்டை இலக்கிய மரபாகும். சுவாமிகள் வகுத்துரைக்கும் பொருளிலக்கணமோ மக்களின் நடைமுறை வாழ்வினை மையமாகக் கொண்டு விளக்கும் புது முறையில் அமைந்த பொருளிலக்கணமாகும்”1என்கிறார்.
இந்நூல் பொருளை அகப்பொருள், புறப்பொருள், அகப் புறப்பொருள் என மூவகையாகப் பகுத்துரைக்கிறது. இவ்விலக்கணம் தோற்றுவாய், உறுப்பியல்பு, குறிப்பியல்பு, பழமை இயல்பு, துறை இயல்பு ஆகிய ஐந்து இயல்புகளை அகப் பொருளிலும், நிலத்தியல்பு, உழியியல்பு, வேற்றுயிரியல்பு, கருவிஇயல்பு, தொகுப்பியல்பு ஆகிய ஐந்து இயல்புகளைப் புறப்பொருளிலும், அகப்புறப்பொருள் நிலை என்ற ஓர் இயல்பை அகப்புறப் பொருளிலும் ஆக மொத்தம் பதினோர் இயல்புகளைக் கொண்டு விளங்குகிறது. இப்பொருளிலக்கண மொத்த நூற்பாத்தொகை நூற்றிருபத்திரண்டாகும்.
I. அகப்பொருள்
1.தோற்றுவாய்
1.தெருள்இலக் கணம்உணர் சிறுமுனி வழிபட
 அருள்இலக் கணம்பகர் அறுமுகத்து ஒருவனை
 மருள்இலக் கணம்அற வழுத்தும் மாண்பால்
 பொருள்இலக் கணமும் புகலுதும் சிறிதே.