பக்கம் எண் :
 
சொல்லிலக்கணம்188
மலர்ச்சோலைகளில் தோன்றும் தென்றலைப் போற்றும் அறிஞர்களின் உள்ளத்தின் ஒரு பகுதியில் இருக்கும் என்றவாறு.
தமிழ்ப் புலவர்கள் தென்றலைப் போற்றுதல் அது தமிழோடும் அகத்திய முனிவரோடும் தொடர்புடைமைபற்றி. புலவர்மனத்து ஓர்பால் கிடப்பன என்றது அவர்கள் அறிவர் என்ற பொருளில் அவர்களை அணுகித் தெளிக என்பது குறிப்பு. இவ்விகுதிகள் பல்வேறு நிலைகளில் வருதலின் இவவாறு கூறப்பட்டது.
(276)
112.உலகம் எங்கணும் நிகழ்ஒலி உருவாய்
 சொற்களை இவ்வணம் சுருக்கிச் சொற்று
 வேறுஇலக் கணம்சொல விரும்புகின்ற றனமே.
உலக முழுவதிலும் உருவாக விளங்குகின்ற சொற்களின் இலக்கணத்தை இவ்வாறு சுருக்கமாகக் கூறி முடித்து இனி அடுத்துப் பொருள்ஆகிய வேறு ஓர் இலக்கணத்தைக் கூற விரும்புகிறோம் என்றவாறு.
உலகம் என்றது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்உலகத்தை. என்னை? இவர் இலக்கணம் கூறியது தமிழ்ச் சொற்களுக்கே ஆதலின். இங்கேகூறப்பட்டவை சொல் உலகின் பொருள்களான சொற்களின் இலக்கணமேஅன்றிப் பொருள்உலகப் பொருள்களான பண்டங்களின் இலக்கணம் அன்று எனத்தெளிவாக்க ஒலி உருவாய் நிகழ்சொல் என்றார்.
இச்சூத்திரத்தால் அறுவகைஇலக்கணத்தின் இரண்டாம் இலக்கணமாகிய சொல்லிலக்கணம் நிறைவுசெய்யப்பெற்று அடுத்து மூன்றாவதாகிய பொருள் இலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது.
(277)
சொல்இலக்கணம் முற்றிற்று.
ஆக மொத்தச் சூத்திரம் 277.