பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்445
யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்”1 “கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றில் நுழைந்து”2 “அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கட் கன்றிய காத லவர்”3 “வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு”4 அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”5 “அறிவினுள் எல்லாம். தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யாவிடல்”6 “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்”7 என்பனபோன்ற மெய்ம்மொழிகள் முற்கூறிய குற்றங்களை உடையாரையும் அறிவையும் தொடர்புறுத்துக் கூறுதல்காண்க.
11.குறைபடும் புலவோர் கூறும் குற்றம்
 அஞ்சிப் பாடாது அயப்பது பிழையே.
முழுப்புலமை பெறாதவர்கள் (தம் பொறாமையால்) பாடல்களைக் குறைகூறுவதால் பயமடைந்து கவிதைகளைப் புனையச் சோர்வடைவது தவறாகும் என்றவாறு.
“உண்டு குணம்இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே”8 என்பதற் கேற்பப் புல்லறிவாளர் ஒரு மாணவனின் படைப்பு முயற்சியைப் பாராட்டி ஊக்குவித்து முன்னேறச் செய்யாமல் அம் மாணவனின் படைப்பிலுள்ள பிழைகளை மிகைப்படுத்தியும், இல்லாதனவற்றை வலியக் கூறியும் அச்சுறுத்துவர். அதனால் மனம் சோர்வடையாமல் மாணவர் தொடர்ந்து ஊக்கத்துடன் பாடலியற்றி பழக வேண்டும் என்பது கருத்து. இந்நூலாசிரியரின் காலநிலைக் கேற்ப இவர் கவிதையைக் கூறினும் இக்கருத்து சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம் போன்ற படைப்புத்துறை அனைத்திற்கும் முற்றிலும் பொருந்தும்.