| பூவுல கினரும் புனைந்து போற்றும் |
| சேவடிக் குமரன் திருவருள் அதனால் |
| நெல்லைமா நகரில் ஓர் நிமித்தத்து உதித்துத் |
| தொல்லைஊழ் வினையைத் தொலைத்துத் தூய |
| சிந்தையர் மகிழும் சீரொடு விளங்கிச் |
| செந்தமிழ்ச் சுவையால் தெவ்வரும் புகழப் |
| பெற்றுஉயர் பெரியயோர் பேரவை இடத்தும் |
| கற்றவர் அவையினும் கண்மணி எனத்திகழ்ந்து |
| அன்பரை வெறுக்கா ஆர்அமுது ஆகி |
| இன்பமே உயிர்கட்கு இயற்றி எங்களை (10) |
| ஆண்டசற் குருபரன் ஆகித் தீயவை |
| மாண்டுஅறம் நிலைபெற மாதவம் புரியும் |
| முருக தாசனும், முத்தமிழ்ப் புலவனும்,. |
| திருவுரு வாளனும், திருப்புகழ்க் காரனும், |
| தண்ட பாணியும், சமரசப் புனிதனும், |
| கொண்டல்போல் வழங்கும் கோலா கலனும் |
| ஆனவன்; மற்றும் அளப்பறு பேர்புனை |
| ஞான வாரிதி நறுந்தமிழ்க்கு உரிய |
| எழுத்து சொல்பொருள் யாப்புஅணி புலமை |
| வழுத்திய ஆறு வகைஇலக் கணமும், (20) |
| திருப்புகழ்ப் பனுவலும் செந்தமிழ்ப் புலவோர் |
| விருப்புறு வண்ண விதங்களும் பொருநை |
| மாநதி உருமா மலைப்பெரும் கோயில் |
| தூநகை இருவர்தம் தோள்புணர்ந்து உவக்கும் |
| முருக வேள்திரு முன்பின் முதிர்சீர் |
| அருள்வலித் துணைக்கொண்டு அரங்கேற் றினனே. |