| திருமலி கமலச் செல்வர்கள் படைக்கும் |
| உருமலி உயிர்வாழ் அண்டகோ டிகளும் |
| ஆயிரத்து எட்டுஎனும் அண்டம் அனைத்தும் |
| காய்இரும் திகிரி உருட்டியே கஞ்சன் |
| முன்ஆம் தேவர்கள் முதல்பணி கொண்ட |
| மன்ஆம் சூரவன் மாவிரு கூறா |
| விழவடி வேல்விடு விமலன் சேந்தன் |
| அழல்அவிர் பொறிஆறு ஆகிய செவ்வேள் |
| கந்தன் காங்கையன் கடம்பணி தோளன் |
| எந்தமது இறைகும ரேசன் மீதினில் (10) |
| சொற்சுவை பொருட்சுவை துலங்கவும் சந்தம் |
| பற்பல பகுப்பில் பண்கனிந்து ஒழுகும் |
| திருப்புகழ் முதல்ஆம் செந்தமிழ்த் தொகுதியும் |
| மருப்பொலி ஆறு வகையிலக் கணமும் |
| வண்ணத் தமிழ்க்கு வகைவிவ ரம்சொலும் |
| பண்அமை இலக்கணப் பைந்தமிழ் எனவும் |
| நாவலர் தமக்கு நலம்பெற மாட்சியால் |
| தாவிலா வகையால் சாற்றினன் எழிலார் |
| திருநெல் வேலியெனும் சிவபுரத்து அமர்ந்தோன் |
| தருஎன வழிபடும் தன்மையர்க்கு அருள்வோன் (20) |
| கடன்மடை திறந்தெனக் கவிக்குஉரை புகல்வோன் |
| மடமட எனக்கவி மழைசொரி மேகம் |
| புலக்குறும்பு அடக்கிய புனிதன் திரிவித |
| மலக்கட்டு அறுக்கும் வகைஉணர் விவேகன் |
| இருவகை ஆச்சிரமத்து எம்செந்தி னாயகத்து |
| அருமைசேர் புதல்வன் ஆகிய புகழோன் |