பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்437
6.புலமை இலக்கணம்
அணியிலக்கணத்தை நூற்றொன்பது நூற்பாக்களால் நிறைவுசெய்த இவ் வாசிரியர் நிறுத்த முறையானே அடுத்துப் புலமை இலக்கணம் கூறத் தொடங்குகின்றார். இவ்விலக்கணம் தேற்ற இயல்பு, தவறியல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு என்னும் நான்கு உட்பிரிவுகளை உடையது. இப் பகுதி மொத்தம் நூற்று நாற்பத்து நான்கு நூற்பாக்களை உடையது.
இந்நூலாசிரியர் பொதுப்பாயிரத்திலேயே, ‘எழுத்துச் சொற் பொருள் யாப்பணி யெனத்திகழ் இவைதம்மாற் பழுத்து மாமணம் கமழ்தரு புலமையும் பகர்வது குறித்துள்ளேன்”1 எனக் கூறியுள்ளதால் எழுத்து முதலாகிய ஐவகை இலக்கணங்களையும் துறைபோகக் கற்பதனால் பெறப்படுவதே புலமை ஆகும் எனத் தெளிவாகிறது. அத்தகைய சிறந்த புலமை பெறுவதற்குரிய வழிகளுட் சிலவும், பெற்றபின் கைக்கொள்ள வேண்டிய சில ஒழுகலாறுகளும் இவ்விலக்கணத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் இவ்விலக்கணத்தின் மரபியல் சற்றேறக் குறையத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதி போலவே அமைந்துள்ளது. திரு மு. சண்முகம்பிள்ளை அவர்கள் “சுவாமிகள் தரும் புலமை இலக்கணம் தமிழ்ப் புலவர் வரலாற்றுக் கருவூலம் ஆகும்”2 என்றது மிகையாகாது.
பொதுவாக இலக்கண நூல்களின் பாயிரப்பகுதியில் ஆசிரியர் இலக்கணம் கூறப்படுகிறது. அஃதும் ஒருவகையான் புலமை இலக்கணமே எனினும் முந்துநூல் ஆசிரியர் எவரும் இதனைத் தனியொரு இலக்கணமாக விரித்துக் கூறவில்லை. இந்த வகையில் இதுவே முதல் நூலாகும்.
இப் பெரும்பிரிவின் தலைச்சூத்திரம் வழிபடு கடவுள் வாழ்த்தும் செயப்படுபொருளும் கூறிப் புலமை இலக்கணத்தின் தற்சிறப்புப் பாயிரமாக அமைகிறது.