யாப்பருங்கல விருத்தி
பாயிரம்
முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன் செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கிப் பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வாங்கி யாப்பருங் கலநனி யாப்புற வகுத்தோன் தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத் துளக்கறு கேள்வித் துகடீர் காட்சி அளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே.
என்பது பாயிரம்.
இதன்பொருள்: முழுது உலகு இறைஞ்ச - மூவகை உலகமும் வணங்க,
முற்றொருங்கு உணர்ந்தோன் - முழுதுடன் அறிந்தோனது, செழுமலர்ச்
சேவடி செவ்விதின் வணங்கி - வளமலர் போலும் செய்ய அடிகளை
முறைமையால் இறைஞ்சி பாற்படு செந்தமிழ்ப் பரவையின் வாங்கி - பாகுபடு
தென்றமிழ்க் கடல்வயினின்றும் வாங்கி, யாப்பு அருங்கலம் நனி யாப்பு உற
வகுத்தோன் - ‘யாப்பு’ என்னும் அருங்கலத்தை மிகவும் திண்ணிதாக
வகுத்தோன், தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த - தனக்கு எல்லை
தானே யாகிய துறவொடு பொருந்திய, குணக்கடற் பெயரோன் கொள்கையின்
வழாஅ - குண சாகரப் பெயரோனது கோட்பாட்டின் வழுவாது நிற்கும்,
துளக்குஅறு கேள்வி - மயக்கம் அற்ற கேள்வியினையும், துகள்தீர் காட்சி -
குற்றம் அற்ற அறிவினையும், அளப்பருங்கடற்பெயர் - அளத்தற்கு அரிய
கடலினது பெயரினையும் உடைய, அருந்தவத்தோன் - அரிய தவத்தினை
உடையோன் என்றவாறு.
|