வரலாறு:
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘மேனமக் கருளும் வியனருங் கலமே
மேலக விசும்பின் விழவொடு வருமே
மேருவரை அன்ன விழுக்குணத் தவமே
மேவதன் றிறநனி மிக்கதென் மனமே’.1
இது மோனையந்தாதி. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
[கட்டளைக் கலித்துறை]
‘அந்தம் முதலாத் தொடுப்பதந் தாதி; அடிமுழுதும்
வந்த மொழியே வருவ திரட்டை; வரன்முறையால்
முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால்
செந்தொடை நாமம் பெறும்நறு மென்குழற் றேமொழியே!’2
‘மாவும்புள் மோனை; இயைபின் னகை; வடியே ரெதுகைக்
கேவில் முரணும் இருள்பரந் தீண்டள பாவளிய;
ஓவிலந் தாதி உலகுட னாம்; ஒக்கு மேயிரட்டை;
பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பனிமொழியே!’3
இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
53) ஒரு செய்யுட்கண் தொடை தளைகளிற்
பல விரவிவரின் அவற்றை வழங்குமாறு
தொடைபல தொடுப்பினும் தளைபல விரவினும்
முதல்வந் ததனால் மொழிந்திசிற் பெயரே.
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், ஒரு செய்யுட்கண் பல தொடையும் பல தளையும் வந்தால், அவற்றை வழங்கும் முறை உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : ஒரு செய்யுளகத்துத் தொடை பல தொடுத்து வந்தாலும், தளை பல விரவி வந்தாலும், அவற்றை முதல் வந்த தொடையாலும் முதல் வந்த தளையாலும் பெயர் கொடுத்து வழங்குக (என்றவாறு)
‘மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரால்
இயங்கினும் தளைவகை இன்னணம் ஆகும்’.
என்றார் அவிநயனார்.
1. யா. வி. 96 உரைமேற். 2. - 3 யா. கா. 17, 18
|