|
உறுப்பியல்-எழுத்தோத்து 25 |
‘நெடிலே குறிலிணை குறினெடில் என்றிவை ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென்று ஏழ்குற் றுகரக் கிடனென மொழிப.’
என்றார் ஆகலின். அவை வருமாறு.
நாகு, காசு, காடு, காது, காபு, காறு - என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
நாக்கு, காச்சு, காட்டு, காத்து, காப்பு, காற்று - என நெடிலொற்றின் கீழ்
ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
வரகு, முரசு, முருடு, மருது, துரபு, தவறு - எனக் குறிலிணைக்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
அரக்கு, பொரிச்சு, தெருட்டு, குருத்து, பொருப்பு, சிரற்று - எனக்
குறிலிணை ஒற்றின் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம்
வந்தவாறு.
அசோகு, பலாசு, மலாடு, கெடாது, புதாபு, விராறு - எனக் குறில்
நெடிற் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
நமாக்கு, தடாச்சு, பனாட்டு, கெடாத்து, புதாப்பு, விராற்று - எனக்
குறினெடில் ஒற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம்
வந்தவாறு.
நக்கு, கச்சு, கட்டு, கத்து, கப்பு, கற்று - எனக் குற்றொற்றின்கீழ் ஆறு
வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
குறிப்பு: - காச்சு - ஒலிக்குறிப்பு (காச்சுமூச்சென்று), காட்டு - உதாரணம் (கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் - நன்.சூ.22.), முருடு - மத்தளவகை (முருடதிர்ந்தன - சிலப். மங்கல.), மருது - மருதமரம், துரபு - செலுத்தி, கவறு - சூதாடுகருவி, காதல்கவறுஆடல் - நள, கலி.39, பொரிச்சு - பொரித்தல் தெருட்டு - தெளியச் செய், பொருப்பு - மலை, சிரற்று - கோபி (சிறுபாகராகச் சிரற்றாது. கலி. 97:29); பலாசு - ஈரப்பலா, மலாடு - மலையமான் நாடு என்பதன் மரூஉ (நன்.சூ.273 உரை); பனாட்டு - பனவெல்லம் (தொல். எழுத்.284), நக்கு - சிரித்து, கச்சு - இரவிக்கை (கச்சது கடிந்து, கல்லாடம் 44), கப்பு - பிளவு.
|