பக்கம் எண் :
 

 24                                    யாப்பருங்கல விருத்தி

     - அவைதாம்,

     புள்ளியொடு நிற்றல் இயல்பென மொழிப;
     புள்ளியில் காலை உயிர்மெய் ஆகும்.’

 என்பது சங்கயாப்பு ஆகலின். அவை ஒரோ ஒன்று அரையரை மாத்திரை எனக் கொள்க. என்னை?

     ‘உறுப்பின் அளவே ஒன்றன் பாகம்’

 என்றார் கையனார்.

     ‘அரைநொடி அளவின அறுமூ வுடம்பே.’
     ‘அரைநொடி என்ப தியாதென மொழியின்
     நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே.’

 என்றார் சங்கயாப்புடையார்.

 சார்பில் .தோன்றும் தன்மைய ஆவன, குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும் எனஇவை. என்னை?

     ‘குற்றிய லிகரம், குற்றிய லுகரம்
     ஆய்தப் புள்ளி என்றிவை மூன்றும்
     சார்பில் தோற்றத் துரிமையு முளவே’

 என்ப ஆகலின்.

     ஏழிடத்து1 ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால், அதனைக் ‘குற்றியலுகரம்’ என்று வழங்குப. என்னை?

     ‘எழுவகை இடத்தும் குற்றிய லுகரம்
     வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே’

 என்பது பல்காயம் ஆகலின்.

     எழுவகை இடமாவன, நெடிற் கீழும், நெடிலொற்றின் கீழும், குறிலிணைக் கீழும், குறிலிணை ஒற்றின் கீழும், குறில் நெடிற் கீழும், குறில் நெடில் ஒற்றின் கீழும், குற்றொற்றின் கீழும் என இவை. என்னை?

 

     குறிப்பு: ஒரோஒன்று - ஒவ்வொன்று, உறுப்பு - மெய்யெழுத்து, ஒன்றன் பாகம் - அரை(பாகம் - பாதி). 1தொல்காப்பியரும், பவணந்தி முனிவரும் குற்றுகரத்திற்கு ஆறிடமே வேண்டினர் (தொல். எழுத்து. சூ. 36. 406; நன். எழுத்து. சூ. 39). காறு - காலஅளவு (கம்ப. மீட்சி. 140).