|
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின் நிறுத்த முறையானே ஆசிரியப்பா
ஆமாறு, பொது வகையான் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : அகவல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைய
நான்கு ஆசிரியப்பாவும்; அவைதாம், ‘ஏ’ என்றும், ‘ஓ’ என்றும்,
‘ஈ’ என்றும், ‘ஆய்’ என்றும், ‘என்’ என்றும், ‘ஐ’ என்றும் இறும்
(என்றவாறு).
‘அகவல்’ என்பது, ‘ஆசிரியம்’ என்றவாறு. என்னை?
‘அகவல் என்ப தாசிரியப் பாவே’.1
என்றாராகலின்.
ஏ, ஓ, ஈ’ என்புழி, ‘ஏ’ என்னும் அசைச் சொல்லை முன்
வைத்தமையால், ‘ஏ’ என்று இறுவது சிறப்புடைத்து. என்னை?
‘சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்’
என்பது தந்திர உத்தியாகலின்,
‘அகவல் இசையன அகவல்; அவை
ஏஓ ஈஆய் என்ஐ என்றிறும்’.
என்னாது ‘மற்று’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?
ஏந்திசை அகவலும், தூங்கிசை அகவலும், ஒழுகிசை அகவலும் என
மூன்று வகைப்படும். அகவல் ஓசை என்பது அறிவித்தற்கு வேண்டப்
பட்டது.
‘நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும்,
நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும்,
ஆயிரு தளையுமொத் தாகிய அகவலும்,
ஏந்தல் தூங்கல் ஒழுகல் என்னா
ஆய்ந்த நிரல்நிரை ஆகும் என்ப’.
என்றாராகலின்.
1. சங்கயாப்பு; யா. வி. 16, 27 உரைமேற்.
|