அவற்றுள் ஓரடி குறைந்து வருவனவற்றை நேரிசை ஆசிரியப்பாவின் இனம் என்றும், ஈரடி குறைந்து வருவன வற்றை இணைக்குறள் ஆசிரியப் பாவின் இனமென்றும், அடிமறியாய் வருவனவற்றை மண்டில ஆசிரியப் பாவின் இனம் என்றும், அடிமறி இன்றியே நின்றவாறே நின்று பொருள் பயப்பன நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம் என்றும், இவ்வாறே ஒருபுடை ஒப்புமை நோக்கிப் பாச்சார்த்தி வழங்கப்படும் எனக் கொள்க. என்னை?
[நேரிசை வெண்பா]
‘அகவற் கினமாய ஆறினையும் ஈரேழ்
பகுதித் தளையவற்றாற் பார்ப்பத் - தொகுதிக்கண்
எண்பத்து நான்காம்; இனியவற்றின் மிக்கனவும்
பண்புற்றுப் பார்த்துக் கொளல்’.
ஆசிரியப்பாவும் அதன் இனமும் முடிந்தன.
78) கலிப்பா
‘துள்ளல் இசையன கலிப்பா; மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், நிறுத்த முறையானே பொது வகையாற் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : துள்ளல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைய எல்லாம் கலிப்பா; அவை வெண்பாவும் ஆசிரியப்பாவுமாய் இறும் (என்றவாறு).
‘பிறிதின் நடப்பினும் வஞ்சியும் கலியும்
இறுதி மருங்கின் ஆசிரி யம்மே’.
‘கலியே வெண்பா வாயினும் வரையார்’.
என்றார் ஆகலின்.
‘துள்ளல் இசையன கலியே;
வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறும்’.
என்றாலும், சார்ச்சியால், ‘அவை’ என்பது பெறலாம்; ‘மற்றவை’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?
|