இவை எல்லா அடியும் முதல் நடு இறுதியாகச் சொன்னாலும் பொருள் கொண்டு நிற்குமாகலின், ஆசிரிய மண்டில விருத்தம்.
பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
[வெண்டளைக் கலித்துறை]
‘தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன நான்கடியாய்
எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே
சுருக்கடி யாயும் துறையாம்; குறைவில்தொல் சீரகவல்
விருத்தம் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே!’1
இக் காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.
‘அறுசீர் முதலா நெடியவை எல்லாம்
நெறிவயின் திரியா? நிலத்தவை நான்காய்
விளைகுவ தப்பா இனத்துள விருத்தம்’.
என்றார் காக்கைபாடினியார்.
‘அறுசீர் எழுசீர் அடிமிக வரூஉம்
முறைமைய நாலடி விருத்தம் ஆகும்’.
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
‘அறுசீர் எழுசீர் அடிமிக நின்றவும்
குறைவில் நான்கடி விருத்தம் ஆகும்’,
என்றார் அவிநயனார்.
‘ஆறு முதலா எண்சீர் காறும்
கூறும் நான்கடி ஆசிரிய விருத்தம்’.
என்றார் பிறை நெடுமுடிக் கறைமிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்.
ஆசிரியத்து இனமாகிய தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றும்; ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக்குறட் டுறை, ஆசிரிய நிலை விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம் என்று கூறுபடுப்ப ஆறாம். அவை சிறப்புடை ஏழு தளையாலும் சிறப்பில் ஏழு தளையாலும் கூறுபடுப்ப, எண்பத்து நான்காம். பிறவாற்றாலும் விகற்பிக்கப் பலவாம்.
1. யா. கா. 30 பி.ம் : திரியின்
|